பூச்சிகளை உண்ணும் காலம் விரைவில்…

மனிதர்கள், பூச்சிகளை சமைத்து உண்ணும் காலம் விரைவில் வரும் என்கின்றனர் வல்லுநர்கள். குறைந்த காலத்தில், குறைந்த செலவில், அதிக புரதச் சத்தினைத் தரக்கூடியவை பூச்சிகளே. இருந்தும், அவற்றை வளர்த்து உண்பதற்கு யாரும் தயாராக இல்லை. வெட்டுக்கிளி, குளவி, அந்துப்பூட்டிகள், நாவல் பூச்சிகள், எறும்புகள், பட்டாம்பூச்சி, பட்டு புழுக்கள், தேள்கள் என பல வகை புழு பூச்சிகளை நாம் உட்கொள்ளலாம், அவற்றை நமது உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். அதில் தவறேதும் இல்லை என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

பிரான்சிலுள்ள ‘வைன்செக்ட்’ நிறுவனம் பூச்சிகளை  செல்லப் பிராணிகளுக்கு தீனியாகவும், மீன்களுக்கு உணவாகவும்  தயாரிக்கிறது. மேலும் புழுக்களை பதப்படுத்தி, புரதப் பொடி மற்றும் எண்ணெய்களை ‘வைன்செக்ட்’ தயாரிக்கிறது.

செல்லப்பிராணிகளுக்கான புரதத்தை, ‘வைன்மீல்’ என்ற பெயரில் விற்கிறது வைன்செக்ட்.  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்தகைய புதுமைகளை வரவேற்றுள்ளனர்.

ஒரு கிலோ மாமிசத்தை தயாரிக்க 250 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவை. இதுவே ஒரு கிலோ பூச்சி மாமிசம் வேண்டுமானால் அதற்கு 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போதுமானது. அது மட்டுமல்ல, நீரின் தேவையும் குறைகிறது. ஏனெனில் ஒரு கிலோ பூச்சி மாமிசத்திற்கு தோராயமாக ஆயிரம் லிட்டர் நீர் தேவை என்று சொன்னால், அதுவே ஒரு கிலோ இறைச்சிக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்தாதவை பூச்சி உணவுகள். உணவாக பயன்படுத்தப்படும் பூச்சிகள் (95 இனங்கள்), பிரேசிலில் காணப்படுவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.