வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு

கோவையில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் ஜி.சி.டி.,யில் உள்ள காப்பு அறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. கோவையை பொறுத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 4 ஆயிரத்து 426 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

இதில், 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 7 மணியுடன் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள காப்பு அறைகளில் அனைத்து இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு உபகரணங்கள் பத்திரப்படுத்தப்பட்டுளன.

இந்த கல்லூரி வளாகத்தில் தான் வாக்கு எண்ணும் பணியும் நடைபெற உள்ள நிலையில், கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.