பாரிஸ் சிட்டி போல் பளபளக்கும் ஆர்.எஸ்.புரம் : செல்பி எடுத்து துவக்கி வைத்த அமைச்சர்

கோவை: ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ‘மாடல்’ சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘ஏஞ்சல் விங்க்’ செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (24.2.2021) துவங்கி வைத்தார்.

ஆர்.எஸ் புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி மதிப்பில் ‘மாடல்’ சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முழுமையடைந்த நிலையில் டி.பி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் ‘பிரிட்டிஷ் டவர் கிளாக்’ அமைத்து நான்கு சாலை சந்திப்பில் தார் சாலைக்கு பதிலாக ‘காபுல் ஸ்டோன்’ என்ற கற்கள் வட்ட வடிவில் பதிக்கப்பட்டுள்ளன.

அதே பகுதியில் தேவதை இறக்கை போன்ற ‘ஏஞ்சல் விங்க் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. இந்த தேவதை இறக்கையின் நடுவில் செல்போனில் போட்டோ எடுக்கும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.‌ ‘பாரிஸ்’ நகரின் கட்டமைப்பில் டி.பி ரோடு பளபளப்பாக்க மாற்றப்பட்டுள்ளது.

டி.பி ரோடு முதல் காந்தி பார்க் வரை 1.6 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் நடைபாதை பொலிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும் போது ஓய்வு எடுக்க வசதியாக நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.‌ ஆர்.எஸ் புரத்தின் பழைமை, பாரம்பரியம், புராதனம் போன்றவற்றை அடையாளம் காணும் வகையில் பழங்கால தோற்றத்தில் வீதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌ ஆர்.எஸ் புரம் பகுதியை உருவாக்கிய முக்கிய தலைவர்களின் விவரங்கள்‌ பொதுமக்களின் பார்வைக்காக வீதியோரங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மாடல் ரோடு கோவை நகர மக்களுக்கு ரோல் மாடல் பகுதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் சாலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். மேலும், ‘ஏஞ்சல் விங்க்’ செல்பி ஸ்பாட்டில் முதல் முறையாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செல்பி எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆறுக்குட்டி, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.