கே.பி.ஆர் கலை கல்லூரியில் “இளைஞர் தின விழா”

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் 158 வது பிறந்த நாளையொட்டி, “இளைஞர் தின விழா” நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளையும், டாக்டர் அப்துல் கலாமின் உன்னத சிந்தனைகளையும், பாரதியாரின் உயரிய கருத்துகளையும் மாணவர்களுக்கு சிறப்புரையாக வழங்கிச் சிறப்பித்தார். தொடர்ந்து, கே.பி.ஆர் குழுமத் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமையுரை வழங்கியபோது, இளைஞர்களாகிய நீங்கள் இன்றைய சமுதாயத்தின் தூண்கள் என்றும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தியாகம், தனிமனித ஒழுக்கம், நாட்டுப்பற்று, தெய்வபக்தி ஆகியவற்றைக் கொண்டு சுவாமி விவேகானந்தர் சென்ற வழியில் அனைவரும் செல்ல வேண்டுகிறேன் என்று கூறினார். மேலும், இவ்விழாவில் சமூக சேவை செய்தவர்களுக்கு “விவேகானந்தர் சமூக சேவை விருதை”  ஜீவிதம் அமைப்பின் தலைவர் மனிஷா கிருஷ்ணசாமி, நிழல் மையத் தலைவர் முருகன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, “மகுடம் 2020” நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.