‘எண்ட்ரியே’ இல்லாமல் ‘எக்ஸிட்’

ஒரே ஒரு ட்விட்டர் செய்தி தமிழகத்தில் பல அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டு இருக்கிறது. குறைந்தக் காற்றழுத்த மண்டலம் வலுப்பெற்று வருவதைப்போல இதோ, இப்போ வருவார், அப்போ வருவார் என்று பல வருடங்களாக ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த புயல் உருவாகி, கரையைக் கலக்கும் என்று அதிர்ந்தவேளையில், புயல் புஸ்வாணமானதுபோல நடிகர் திரு.ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் ‘எண்ட்ரியே’ இல்லாமல் ‘எக்ஸிட்’ ஆகி இருக்கிறது.

ரஜினியின் இந்த அறிவிப்பு பலருக்கு பல வகையான பாதிப்புகளை, குறிப்பாக அரசியல் களத்தில் உருவாக்கி இருக்கிறது. முன்புபோல அவ்வப்போது ஸ்டேட்ணெட் என்று இருந்த நிலையைத் தாண்டி இந்த முறை ரஜினியும் தானே வேகமாக முன்வந்து களத்தில் குதிப்பேன், ஆன்மிக அரசியல், 234 தொகுதிகளிலும் போட்டி என்றெல்லாம் சொன்னார். கூடவே, தனது கட்சியின் அறிவிப்பு 2020 டிசம்பர் 31 அன்று வெளிவரும் என்று ஒருங்கிணைப்பாளர்களையும் அறிவித்தது ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இவர் வருவதனால் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக அணிகளில் எதற்கு வாக்குகள் அத¤கம¢ குறையும் என்பது தொடங்கி, பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது அணி உருவாக்கத் திட்டம் என்று பல ஊகங்களும் வலம் வந்தன. இன்னொரு புறம் கூட்டணி, மூன்றாவது அணி விவாதங்களும் சூடு பிடித்திருந்தன. இந்த நிலையில்தான் ரஜினியின் ‘நோ’ அறிவிப்பு வந்து அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை, குறிப்பாக ரஜினியின் ரசிகர்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் எல்லோரும் ரஜினியின் நிலைப்பாட்டை பாராட்டித்தான் வருகின்றார்கள். தனது உடல்நிலையை ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்த நிலையில் அதில் குறை சொல்ல முடியாது. என்றாலும் இதன் அரசியல் தாக்கம் குறித்து விவாதங்கள் தொடர்கின்றன.

முதலில் இதை வைத்து அரசியல் செய்வதாக கருதப்பட்ட பாரதிய ஜனதாவுக்கு அப்படி ஒரு நிலை இருந்தால் அது கண்டிப்பாக பின்னடைவைத்தான் தந்திருக்கும¢. கடைசியாக கூடுதல் தொகுதிகளை அது அதிமுகவிடம் கேட்பதுகூட கொஞ்சம் வலுக் குறைந்ததாகத்தான் இருக்கும் என்ற நிலை உள்ளது. பாரதிய ஜனதா, ரஜினி கட்சி, மற்ற சில கட்சிகள் என்று சொன்ன மூன்றாவது அணி கணக்கு சிதறிப்போய் இருக்கிறது. அந்த கட்சியின் அடுத்த நகர்வைப் பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பல கட்சிகளில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் இப்போது அதே கட்சிகளில் தொடரப் போகிறார்கள். திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கு மாற்று என்று யோசித்தவர்கள் இப்போது என்ன செய்வது, யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி என்ற புதிய அரசியல் சக்தி உருவாவது தடைபட்டுப் போய் மீண்டும் தமிழகத்தைப் பொறுத்தவரை மீண்டும் அதிமுக, திமுக என்ற இரு அணிகள் நிலை பெற்றிருக்கின்றன. கூடவே அவ்வப்போது வரும் தூரத்தில் தெரியும் மூன்றாவது கட்சிகளாக கமல் கட்சி போன்றவை இடம்பெறுகின்றன.

ஆக, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் தமிழக சட்டசபைத¢ தேர்தலில் களம் காண¢கிறார்கள். அரசாங்கத்தின் சாதனைகளை எடப்பாடியாரும், ஊழல்கள் என்று ஸ்டாலினும் மக்களிடம் எடுத்துரைக¢கிறார்கள். இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இரண்டு பெரிய அரசியல் கட்சித் தலைவர்களுமே கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டனர். அதிமுக 2021ம் ஆண்டை பொங்கல் பரிசுடன் தொடங்கி இருக்கிறது. மற்ற கட்சிகள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். இரண்டு பெரிய அரசியல் தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத அரசியல் களத்தில், மூன்றாவது சக்தியாக உருவெடுக்க நினைத்த ரஜினிகாந்த் இல்லாத நிலையில் மீதம் உள்ள கட்சிகள் என்ன செய்யப்போகின்றன, அவை சார்ந்த சிந்தனையாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

அரசியல் என்பது மக்களின் தலையெழுத்தை எப்போதும் நிர்ணயிக்கும் சக்தி; அதை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று கருத்து கூறலாம். ஆனால் செயல்படுத்திக் காட்டுவது மிகவும் கடினம். நல்லதை செய்ய நினைக்கலாம், ஆனால் அதை பொதுவெளியில் செய்து முடிப்பதற்கு பல்வேறு திறமைகளும் தகுந¢த சூழல்களும் தைரியமும் தேவைப்படுகின்றது. அதைத் தங்கள் தோளில் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள்தான் அரசியலில் இயங்க முடியும். இல்லையென்றால், கருத்து கந்தசாமிகளாகவே இருப்பதும், அதையும் தாண்டினால் அரசியலைவிட்டே ஒதுங்குவதும்தான் நடக்கும் என்பதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசம் நமக்குத் தரும் செய்தி.