ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்புவிழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் அலமேலு, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியினைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தொடர்ச்சியான கற்றல் பழக்கத்தைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலமாகவே ஆழமான அறிவைப் பெற முடியும். தற்காலச் சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் அறிவை அன்றாடம் புதுப்பித்துக்கொண்டு இருந்தால் மட்டுமே இந்த போட்டிகள் மிகுந்த சமூகத்தை எதிர்கொண்டு தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் பேசுகையில், இந்தியாவின் மிக முக்கிய முதன்மைப் பத்திரிகைகளின் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருப்பதனையும் சுட்டிக்காட்டி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளாயினும் நேர்முக வகுப்புக்களாயினும் அதில்  ஊக்கத்தோடு கலந்துகொண்டு எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்று பேசினார்.

பின்பு இக்கல்லூரியில் வருடந்தோறும் வழங்கப்படும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 2017 – 2020 ஆம் கல்வியாண்டில் கல்வி, தனித்திறன், சமூகப்பணி என பல்வேறு  நிலையிலும் சிறந்து விளங்கிய பல்வேறு துறையினைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு இந்த விருதுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். மேலும், மாணவர்கள் அனைவரும் யூடியூப் மற்றும் முகநூல் வழியாக இந்நிகழ்ச்சியினை கண்டனர்.