அரசுக்கு நன்றி தெரிவித்த ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளி

கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் தனிநபர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைள் மற்றும் ஆதரவற்றவர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர்.

இதன் மூலம் பயனடைந்த வெள்ளமடையை சேர்ந்த ரகுவரன் என்பவர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசுகையில், நான் வெளிநாட்டில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மார்ச் மாதம் எனது சொந்த ஊருக்கு வந்தேன். அதன்பிறகு வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சரின் சீரிய திட்டங்களில் ஒன்றான தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கான ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நான் இனிப்பு பலகாரகடை வைக்க ரூ.1 லட்சத்தை கடனுதவி வழங்கப்பட்டது.

இக்கடனுதவி மூலம் இனிப்பு பலகார கடை துவங்கினேன். தற்போது நிரந்தரமாக வருவாய் கிடைப்பதால் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இத்திட்டத்தை அளித்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.