ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அலுவலர் ஆய்வு

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்துகள் சேவை இன்று துவங்கியுள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை சக்தி சாலையில் 100 அடி ரோடு அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, நகர்கோவில், தென்காசி, பெங்களூர், ராஜபாளையம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சுமார் 6 மாதங்கள் கழித்து தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளின் சேவை துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிக்காட்டுதல் படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பேருந்தை இயக்கும் முன் கிரிமிநாசினி தெளித்தல், ஓட்டுனர், பயணிகள் ஆகியோருக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.