ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் உலக தபால் தின கொண்டாட்டம்

உலக தபால் தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு அஞ்சல் உறை  வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி உலக தபால் தினம் அனுசரிக்கப்படுகிறது. 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் இந்திய அஞ்சல் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு காலகட்டத்தில் முழு நாடும் வீட்டிற்குள் முடங்கிய நிலையிலும் போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட நிலையிலும், இந்திய அஞ்சல்துறை மருந்துகள் அடங்கிய பார்சல்களையும் முக்கிய தபால்களையும் தேவையானவர்களுக்கு பணப்பட்டுவாடா ஆகியவற்றை அவர்களது இல்லத்திலேயே கொண்டுசென்று சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா கால கட்டத்தில் தபால்காரர்கள் தங்களது உயிரினையும் துச்சமாக மதித்து உயிர்காக்கும் மருந்துகளை நாடெங்கும் பட்டுவாடா செய்ததும், வயதான முதியோர் பென்சன் தொகையினையும் அரசு அறிவித்த நிவாரண தொகையினையும் பயனாளிகளுக்கு அவர்களது இல்லத்திற்கு சென்று பட்டுவாடா செய்ததும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.

அந்தவகையில் தபால்காரர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த உலக அஞ்சல் தின உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உரையை மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் வெளியிட உதவி இயக்குநர் கோபாலன் பெற்றுக்கொண்டார்.

இந்த சிறப்பு அஞ்சல் உறை கோவை தபால் அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு மையம் மற்றும் தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், உதகை, பொள்ளாச்சி, சேலம், சூரமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பத்தூர், தலைமை அலுவலகங்களிலும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.