கோவையில் கொரோனா பரவல் சதவீதம் குறைந்துள்ளது

– அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக 20 நடமாடும் பரிசோதனை வாகனங்களை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 7 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக நடமாடும் பரிசோதனை வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் வாகனத்தில் ஆய்வு பரிசோதனைகளை மேற்கொள்ள செவிலியர், மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர்கள் இருப்பர். கோவை மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 212 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 5 மண்டலங்களாகவும் புறநகர் பகுதிகளை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து அதற்கென தனித் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 516 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 25 ஆயிரத்து 914 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 21 ஆயிரத்து 168 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 53 அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில், பரிசோதனைகள் அதிகரித்த நிலையிலும், உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 500க்குள் உள்ளது. கோவையில் கொரோனா வைரஸ் பரவல் 7 சதவீதமாக குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 376 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொடிசியாவில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 782 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 730 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தப் வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் ஓர் கவசம் அணிய வேண்டும் என்றார்.