அரசு மருத்துவமனை செவிலியர் உட்பட 446 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் உள்பட 446 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் இருந்தே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 490க்கும் மேல் இருந்த நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து 500க்கும் மேல் அதிகரித்தது.

கடந்த 8 நாள்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் மேல் இருந்தது. இந்நிலையில் 2 வாரங்களுக்குப் பிறகு கோவையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 33 வயது செவிலியர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீளமேடு, செல்வபுரம், கவுண்டம்பாளையம், துடியலூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, சூலூர், குனியமுத்தூர் உள்பட பகுதிகளை சேர்ந்த 446 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கோவை மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிற கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

மேலும் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,087 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 4 ஆயிரத்து 32 பேர் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.