கோவை ஞானிஎனும் ‘இலக்கியச்சுடர்’

ஒருதமிழாசிரியராகத் தொடங்கிய வாழ்க்கையை கல்வி, இலக்கியஆர்வத்தால், அறிவாற்றலால் ‘கோவை ஞானி’எனும் தனிச்சிறப்பு வாய்ந்த ஆளுமையாக தன்னை செதுக்கிக்கொண்டவர் இவர். எவருடனும் எவ்வித சமரசமும் செய்யாத நெஞ்சுரமும் நேர்மையும் படைத்த இலக்கியவாதி. தமிழகத்தில் ‘மார்க்சியத்தையும், தமிழையும்’ இருகண்களாகக்கொண்ட அறிஞர்களில் இவருக்கும் முக்கிய இடமுண்டு. குறிப்பாக, இந்தியாவுக்கான மார்க்சியத்தைப் பற்றிய கருத்தாக்கத்துடன் ஆய்வுகளைச் செய்தவர்.

வறட்டுத் தத்துவப்பிடிவாதங்களை ஒதுக்கிவிட்டு மெய்யியலைகற்றவர்.
வானம்பாடி இயக்கத்தில் சிறகடித்த விடுதலைக்கவிஞர்களில் ஒருவராக இருந்தாலும், தனது தனித்தன்மையால், எப்பக்கமும் சாயாத திறனாய்வுகளால், ஆழமான அர்ப்பணிப்பு கொண்ட படிப்பால் தன்னை கோவையின் முக்கிய இலக்கிய ஆளுமையாக நிலைநிறுத்தியவர். வாழ்வின் ஒரு கட்டத்தில் பார்வையை இழந்த போதும் அதுகுறித்து கலங்காமல் மற்றவர்களைப் படிக்கச் சொல்லிக்கேட்டு தனது அறிவுப்பசியை, இலக்கிய ஆர்வத்தைத் தணித்தவர்.

இவரதுகாலம் தொட்டு,இக்கால இளைய இலக்கியவாதிகள் வரை அனைவரிடமும் அன்பு பாராட்டியவர்.புதிய தலைமுறை, பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் என்று சிற்றிதழ்களில் பயணித்தவர்.எஸ்.என். நாகராசன், எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்சிய அறிஞர்களுடன் நெடுங்காலத் தொடர்பில் இருந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தமிழ் மெய்யியல் குறித்த தெளிவான கோட்பாடுகளும் அறங்களும் உடையவர். மகாத்மா காந்தியையும், அம்பேத்கரையும், பெரியாரையும் மார்க்சிய பார்வையில் மக்களுக்காக பார்க்கும் மனம் படைத்தவர்.

‘கோவை ஞானி’எனும் உருவம் மறைந்தாலும் இவரின் சிந்தனைகளும், திறனாய்வுகளும், கருத்துகளும் உருவாக்கிய இலக்கிய சுடர் என்றும் அணையாமல் ஒளிவீசிக்கொண்டிருக்கும்.