சுகாதார ஆய்வாளர் உட்பட 289 பேருக்கு தொற்று உறுதி

இன்று கோவையில் கொரோனா நோய்த் தொற்றால் சுகாதார ஆய்வாளர் உள்பட 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருவர் உயிரிழந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் வட்டார சுகாதார ஆய்வாளர் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரம் வன்னியம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 34 வயது ஆண், 43 வயது பெண், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 23 வயது காவலர், அரசு மருத்துவமனை 27 வயது பெண் பயிற்சி மருத்துவர், செல்புரத்தில் 8 பேருக்கும், வேடபட்டி, ஆர்.எஸ்.புரத்தில் தலா 6 பேருக்கும், பட்டணம், ஒண்டிப்புதூர், சூலூர், சங்கனூரில் தலா 4 பேருக்கும், பொள்ளாச்சியில் 3 பேருக்கும், பீளமேட்டில் 2 பேர் உள்பட 289 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த உக்கடத்தை சேர்ந்த 57 வயது பெண், கவுண்டம்பாளையம் பாரதி நகரை சேர்ந்த 65 வயது முதியவர் இருவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 44 ஆண்கள், 22 பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழந்துள்ளனர்.