பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி டிவிட் !

கோவையில் பெரியார் சிலை காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய தேசிய காங்கிர்ஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீப காலமாக மத ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. கறுப்பர் கூட்டம் என்ற யூட்டியூப் சேனல் ஒன்றில் தமிழ் கடவுள் முருகனின் வாழ்த்துப்பாடளான கந்தர் சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்திருந்தது. இந்து அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாக கந்தர் சஷ்டி கவசத்தை விமர்சனம் செய்த பெரியாரிஸ்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்படிருந்த நிலையில், அவர் போலீசில் சரணடைந்துள்ளார்.

இந்த சூழலில், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது பாரத் சேனா அமைப்பின் தொண்டர் ஒருவர் காவி சாயத்தை ஊற்றினார். இது பெரியாரிய ஆதரவாளர்களை கொதிப்படைய செய்யவே கோவையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிறகு சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த நபர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்த சூழலில்,  நேற்று நள்ளிரவில் கோவையில் பல கோவில்கள் முன்பு டயர்கள் எரித்து போடப்பட்டன. கோவில் சிலைகள் முன்பு தீ வைக்கப்பட்டதோடு, கோவிலின் உடமைகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெரியார் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.