238.4 கோடி மதிப்பிலான திட்டங்கள் கோவையில் துவக்கம்

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், கொரோனா கட்டுப்பாடு மற்றும் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ள கோவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 238.4 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை முதல்வர் சந்தித்து பேசுகையில், அரசின் வழிமுறைகளை பின்பற்றி கோவை கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக கோவையில் இந்த நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் மொத்தம் 10 பரிசோதனை நிலையம் உள்ளது. இதில் ஒருநாளைக்கு 2000க்கும் மேற்பட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை கோவையில் 36,905 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதைபோல் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அரசின் திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். அத்திக்கடவு – அவிநாசி குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரடவிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் சிறு, குறு தொழில் நிறுவங்களுக்கு இதுவரை 125 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. 1,57,000 தொழில் நிறுவனங்களுக்கு  ரூ.4,145 கோடி அளவிற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு 15 ஆயிரம் கோடி வழங்க முடிவுசெய்து தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறோம். மேலும், கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசின் சார்பில் மனமார்ந்த நன்றி. காவல்துறையினர் வியாபாரிகளிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கனிவாக நடந்து அவர்களது அன்பை பெற வேண்டும் என்றார்.

இவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகர்கள் பலர் கலந்துகொண்டனர்.