கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கம் தேவையில்லை

– மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவையில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார்.

மாவட்டம் முழுதும் 400 ஆட்டோக்களை பயன்படுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த ஆட்சியர்
கோவையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மூலமாகவே கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், அவ்வாறு கோவைக்கு வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுள்ளதாகவும் கூறினார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அறிவிப்பை மீறி வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் நாள்தோறும் 2000 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
இன்று 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.