தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க கோரிக்கை

தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்க கோரி கோவை மாவட்ட தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த வேண்டி மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அனைத்து சேவைகளும் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் சென்னையை தவிர கோவை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன்படி கோவையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தட்டச்சு மற்றும் கணிணி பயிலகங்களை மீண்டும் திறக்க கோரி தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் ராசமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநிலத் தலைவர் கலைவாணன் மற்றும் கோவை மாவட்டத் தலைவர் கண்ணையன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வழங்கிய மனுவில் அரசின் உத்தரவுப்படி சமூக விலகலை கடைபிடித்து பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பட்டு இருந்தனர்.