வெளிமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசு அறிவுரை

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் வெளிமாநிலத்  தொழிலாளர்கள் சொந்த ஊர்களை நோக்கிச்  செல்ல முயற்சிச்கின்றனர். இதனால் தொற்று அச்சம், உயிரிழப்பு ஏற்படலாம் என்பதால் மத்திய அரசின் சார்பில் மாநில அரசிற்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநிலங்கள் மற்றும் ரயில்வே துறை இடையேயான ஆக்கப்பூர்வ ஒருங்கிணைப்புடன் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது, வெளிமாநிலத்  தொழிலாளர்களின் பயணத்துக்கான பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை மாநிலங்களுக்கு இடையே அனுமதிப்பது, ரயில்கள் / பஸ்கள் புறப்பாடு பற்றி இன்னும் தெளிவான விளக்கம் அளிப்பது, அரைகுறைத் தகவல்கள் மற்றும் வதந்திகளால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இடையே அமைதியின்மை ஏற்படுவது, ஏற்கெனவே நடைப்பயணமாக, புறப்பட்டுள்ள தொழிலாளர்கள் செல்லும் வழிகளில் உணவு மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய ஓய்விடங்களை மாநிலங்கள் அமைக்கலாம்.

நடைப்பயணம் மேற்கொண்டுள்ள தொழிலாளர்கள் இந்த ஓய்விடங்களுக்கும் அருகிலுள்ள பேருந்து, ரயில் நிலையங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து கொடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் வழிகாட்டலாம். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தலாம்.

நீண்டகாலத் தனிமைப்படுத்துதல் பற்றி எடுத்துரைக்க, ஓய்விடங்களில் தன்னர்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபடுத்தலாம். வெளிமாநிலத்  தொழிலாளர் விவரங்களை முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் பட்டியலிட வேண்டும். இது அவர்களைத் தொடர்பு கொண்டு கண்டறிய உதவியாக இருக்கும்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் யாரும், தங்கள் சொந்த ஊருக்கு சாலை மற்றும் ரயில்பாதைகள் வழியாக நடந்து செல்லவில்லை என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.

தேவைக்கேற்ப  ரயில்களை இயக்க ரயில்வே துறையினருக்கு மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.