கிராமங்களில் இயங்கத் தொடங்கிய சலூன் கடைகள்

கோவையில் 54 நாட்களுக்குப் பிறகு கிராமப்புறங்களில் சலூன் கடைகள் செயல்படத் தொடங்கியது.

இந்தியாவில் கொரானா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாகக் கருதி திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகளைத் திறக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து 54 நாட்களுக்குப் பிறகு கோவை துடியலூர் அடுத்த வி.எஸ்.கே நகர், பன்னிமடை, தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகளைத் திறந்த உரிமையாளர்கள் கடை முழுவதும் கிருமி நாசினிகளைத் தெளித்தும் முகக் கவசம் அணிந்தும் முடி திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளில் கிருமி நாசினிகளைக் கொடுத்து கைகளை சுத்தப்படுத்துகின்றனர். மேலும் சமூக  இடைவெளியைப் பின்பற்றி முடி திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 54 நாட்களுக்குப் பிறகு சலூன் கடைகள் திறந்து இருப்பதால் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.