‘பாவேந்தர்’ பாரதிதாசன்

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தனது எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தினார்.

நகைச்சுவை உணர்வும் இசையுணர்வும் நல்லெண்ணமும் இவருடைய உள்ளத்தில் கவிதை உருவில் காட்சியளித்தன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். ஒருமுறை நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருந்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

இதையடுத்து ஒரு நிகழ்வில், தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதியார் கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலைப் பாடினார். இவரின் முதற்பாடல் பாரதியாராலேயே சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் இவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
1937 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத்தயாரிப்பு என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பாதவர்.
1946, சூலை 29 இல் அறிஞர் அண்ணாவால், ‘புரட்சிக்கவி” என்று கௌரவிக்கப்பட்டார். பாடப் புத்தகங்களில் அ – அணில் என்று இருந்ததை, அ – அம்மா என்று மாற்றியவர் இவர். இலக்கியக் கோலங்கள், இளைஞர் இலக்கியம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குமரகுருபரர் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.

இவர் 1954 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தமது எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் மறைந்தார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

புரட்சிக்கவிஞரின் வரிகள் வாழ்க்கைக்கு நம்பிக்கைத் தருபவை. இவரைக் குறித்து அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.

– பூந்தமிழன்