கோட்டை தாண்டி தான் போய் வாங்கோனும்… கேரளா ஸ்டைலில் தமிழகத்தில் மது விற்பனை

சென்னை: கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றுநோய் தாக்கம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவில் புதிய பாணி கொரோனாவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியபோதும், வாழ்வாதாரத்தை தக்க வைப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளையும் கேரளா அரசு அறிவித்திருக்கிறது. கேரளாவில் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளிலும் கூட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு படங்கள், வீடியோக்கள் வெளியாகி
இருக்கின்றன.

ஒரு கட்டுப்பாட்டுடன் மதுபானங்களை வாங்க வருவோர் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க வேண்டும் என்பதற்காக கோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த கோடுகளில் நின்றுதான் மதுபான பிரியர்கள் வாங்க வேண்டும் என்பது கண்டிப்பாகப் பின்பற்றப்ப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது முன்னுதாரணாகவும் பார்க்கப்படுகிறது.

கேரளா ஸ்டைலில், தற்போது தமிழகத்திலும் இதே ஸ்டைலை பின்பற்றி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மொடக்குறிச்சியில் டாஸ்மாக் கடையில் இப்படி கோடுகள் போட்டு நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கோடுகளின் வழியே செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் கோரிக்கை முன்னதாக தமிழகத்தில் கொரோனா பரப்பும் மையங்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றை இழுத்துமூட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். ஆனாலும் மார்ச் 22ல் நாடு தழுவிய அளவில் கடைபிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.