கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவமனைகளுக்கு ஆலோசனை

கொரோனாவிற்கு ஏற்பட்டு வரும் உயிர்பலிகள் உலக மக்களை நடுங்க வைத்து வரும் நிலையில், இந்தியாவிலும் உயிர் பலி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய மாநில அரசுகள். இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

* COVID 19-ன் வைரஸ் தீவிரமாக பரவி வரும் வேளையில், எந்த நேரத்திலும், எந்தவொரு நோயாளிகளையும் பராமரிக்கும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடி அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள காத்திருந்த நோயாளிகளை பல மருத்துவமனைகள் வீட்டிற்கு திருப்பியனுப்பியுள்ளன.

* கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வகையில் ஒரு சில படுக்கைகளை தயாராக ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.

* அனைத்து மருத்துவமனைகளிலும் முக கவசங்கள், கையுறைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

* எந்தவொரு முன்கூட்டிய அவசர நிலைகளையும் கையாள ஏதுவாக சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

* வெவ்வேறு மருத்துவ துறையில் பணிபுரிந்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருமே தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் கட்டாயம் பயிற்சி பெற வேண்டும்.

* எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் முகமூடிகளை மருத்துவமனைகள் போதுமான அளவு வாங்கி வைக்க வேண்டும்.

* ஒருவேளை இக்கட்டான சூழல் அதிகரித்தால் அதனை சமாளிக்கும் வகையில் போதுமான பயிற்சி பெற்ற மனித சக்தி மற்றும் வென்டிலேட்டர் / ஐசியு பராமரிப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

* நோயாளிகளுக்கு உதவியாக இருக்க ஒரு அட்டெண்டரை மட்டுமே மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும்.

* நோயாளிகளுக்கு இருமல் குறித்தும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்தும், முகக்கவசங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கற்பிக்க வேண்டும்.

* COVID 19 தொடர்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வை அதிகரிக்க மருத்துவமனைகள் சுவரொட்டிகள் போன்றவற்றை வைக்க வேண்டும்.

* கொரோனா பாதிப்பு குறித்தும் அதனுடன் போராடுவது குறித்தும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* தேவைப்பட்டால் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளை வர வேண்டாம் என்று அறிவுறுத்தலாம்.

* மருத்துவமனைகளில் சமூக தூரம் எனப்படும் social distancing-ஐ உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* அனைத்து மருத்துவமனைகளும் நோய் தொற்றை தடுக்கும் எந்தவொரு மருத்துவ பணியாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சையை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்