2020-2021 ஆம் ஆண்டிற்கு ரூ.20474.53 கோடி கடன் வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில்  2020-2021 ஆம் ஆண்டிற்கு ரூ.20474.53 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், இன்று(19.03.2020) 2020-2021 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, வெளியிட்டார். இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனராவங்கி துணைப் பொது மேலாளர் ரமேஷ்  பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார்,  நபார்டு வங்கி மாவட்ட  மேலாளர் இசக்கிமுத்து, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து பேசுகையில், ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக ரூ.20474.53 கோடிக்கு கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2020-2021ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.7611.12 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.9054.61 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.3808.80 கோடி என ஆக மொத்தம் ரூ.20474.53 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1049.53 கோடி அதிகம் என்பது குறிப்பிடதக்கது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.