ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை: கோவையை தொடரும் சோதனை!

பொதுவாக, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்றால் ஷாஜகான் என்று தான் பலரும் பதில் சொல்வார்கள். அதுபோல், மகாத்மா காந்தி தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறுகிறோம். ஏனென்றால் யார் முன்னின்று முயற்சி எடுக்கிறார்களோ, ஒரு செயலை செய்து முடிக்கிறார்களோ, அவர்கள் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் அது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இது கிட்டத்தட்ட எல்லா காரியங்களிலும் எல்லா இடங்களிலும் பொருந்துகிறது. ஒரு வகையில் இது தனிநபர் வழிபாடு என்று விமர்சனங்கள் எழுந்தாலும் இங்கே இதுதான் நடைமுறை. இன்னும் பலர் தங்களில் சிலரை வழிகாட்டிகளாக, தலைவர்களாக, பலம் மிக்கவர்களாக நினைத்து அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது நிஜம்தான்.

அதனால் தான் அவர்களின் தனிப்பட்ட செயல்கள் எல்லாம் கவனிக்கப்படுகின்றன, பாராட்டப்படுகின்றன, விமர்சிக்கப் படுகின்றன. அவர்களின் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வகையில் குறிப்பாக அரசியல், கலை, இலக்கியம் என்று பொதுத்துறை சார்ந்த பிரமுகர்கள் மீது மக்கள் பெரிதும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்ற சொன்னாலும் சரி, இமய மலைக்குப் போனாலும் சரி அது முக்கிய செய்தியாக கவனிக்கப்படுகிறது. அவருடைய திரைப்படம் கவனிக்கப்படுவது வேறு. அவருடைய தனிப்பட்ட இமயமலைப் பயணம் கவனிக்கப்படுவது வேறு. ஆனால் மக்களுக்கு இந்த வேறுபாடு எல்லாம் இல்லை. காரணம், குறிப்பிட்ட பிரமுகர்கள் பொதுத்தளத்தில் இயங்குகிறார்கள்.

பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் எப்போதும் இந்த யதார்த்தத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட தற¢போதைய காலகட்டத்தில் அவர்கள் விழிப்புடன் செயல்படுவது சமூகத்தில் பல சர்ச்சைகளைத் தவிர்க்க உதவும். இல்லையென்றால், சர்ச்சைகளைத் தவிர்க்க இயலாது. அப்படி ஒரு சர்ச்சைதான் தற்போது கோயம்புத்தூரில் எழுந்துள்ளது. அது என்னவென்றால், கோயம்புத்தூருக்கு வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவரைக்  குறித்த சர்ச்சையாகும்.

இதுகுறித்து ஊடகங்களில் பல செய்திகள், சர்ச்சைகள் எழுந்துள்ளன. முதலில், பதினைந்து ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்று அறிவிக்கப்பட்ட ஒரு பதவிக்கு ஆட்கள் கிடைக்காததால், அந்த அனுபவத் தகுதியானது மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பிறகு, இதுகுறித்த விளம்பரமானது, செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டதே தெரியாத அளவுக்கு சிறிய அளவில் பத்தோடு பதினொன்றாக எங்கோ ஒரு மூலையில் விளம்பரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற தேர்வு அணுகுமுறையில் துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய மாவட்டத்தில், மாநிலத்தில் இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையாக குறைவானவர்களே காட்டப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை செயல் அதிகாரி, ஆளுங்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகள், தற்போதுள்ள அமைச்சர் ஒருவருக்கு அவரின் தந்தை மிகவும் வேண்டப்பட்டவர் என்று பல விதமான செய்திகள் வலம் வருகின்றன. வாட்ஸ் அப் குரூப் போன்ற சமூக ஊடகங்கள் ஒருபுறம் இது குறித்து பல செய்திகளை பரப்பி வருகின்றன.

ஒரு முன்னாள் எம் எல் ஏ வின் மகளாக இருப்பதாலேயே அவர் இப்பதவிக்கு தகுதியற்றவர் என்று ஆகிவிட மாட்டார். அதைப்போலவே, தகுதியானவராகவும் மாறிவிட மாட்டார். மேலும் அவர் அந்த விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாகவே கோயம்புத்தூர் வளர்ச்சி பெற்று வரும் வேளையில் பல வகையான உட்கட்டமைப்பு குறைபாடுகள், போக்குவரத்து வசதிக் குறைபாடுகள் உள்ளிட்ட பல தேவைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் காத்திருக்கின்றன. மாநகராட்சியோ, மாநில அரசோ தனியாக அவற்றையெல்லாம் செய்து முடிப்பது என்பது உடனடியாக நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்று. இந்த சூழலில் ‘ஸ்மார்ட் சிட்டி’ போன்ற திட்டங்கள் வரும் போது நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது விவேகம். அதை விடுத்து இது போன்ற சர்ச்சைகள் திட்டத்தை செயல்படுத்தும் வேகத்தை நடைமுறையில் குறைத்து விடும்.

ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொச்சியில் செய்து முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன; பயணிகள் பயணம் செய்கிறார்கள். திட்டத்தின் பலன் எட்டப்பட்டு விட்டது. ஆனால் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் என்னவாயிற்று? இனி என்னாகும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

இதற்கிடையில் இந்த ஸ்மார்ட் சிட்டி தலைமைப்பதவி குறித்த சர்ச்சை வேறு எழுந்துள்ளது. முதலில் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இருதரப்பும் முற்றுப்புள்ளி வைத்து நடைமுறையில் செய்ய வேண்டியதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நாட¢டில் பல பதவிகளில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களே அமர்த்தப்படுவது என்பது பல இடங்களில் சகஜமாகி வருகிறது. இந்நிலையில் நகரின் வளர்ச்சிக்கு என்று அரிவிக்கப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டும் என சூழல் மாறிவருகிறது. இதற்கிடையில் குறிப்பிட்ட பதவிக்கு தலைமை செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொதுவெளியில் வரும் விமர்சனங்களால் இந்த பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் செய்திகள் வருகின்றன—?!

இந்த நிகழ்வுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் ஆகட்டும், அதிகாரிகள் ஆகட்டும். இனிமேலும் எந்த காரியத்தையும் தங்கள் இஷ்டத்திற்கேற்ப எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ரகசியமாக எதையும் செயல்படுத்திவிட முடியாது. எந்தவொரு விஷயமும் பொதுமக்களுக்குக் கண்டிப்பாகத் தெரியவரும், அதனை என்னவென்று கேள்வி கேட்பார்கள். எனவே, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் சுயநலமற்று, எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

அடுத்தது, இதுபோன்ற முக்கிய பதவிகளுக்கு குறுக்கு வழியில் தகுதியின்றி வர நினைப்பவர்கள் தங்களை பெரிய புத்திசாலிகளாகவும், மற்றவர்களை முட்டாள்களாகவும் எண்ணிக்கொள்ளும் நிலை மாற வேண்டும். வேண்டும் என்ற நிலையில்லை, மாறித்தான் ஆக வேண்டும். தகுதியில்லாமல் முக்கிய பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்களுக்கு தற்போதைய சமூகம் குறைந்தபட்ச மன உளைச்சலாவது தரமுடியும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளை, இந்த சமூகம் நினைத்தால் அந்த குறிப்பிட்ட தரம் குறைந்த மனிதர்களை இன்னும் மோசமாக நடத்தவும் முடியும் என்பதற்கான எச்சரிகையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இதுபோன்ற நியமனங்கள் தனிமனிதர்கள், அவர்களின் அரசியல் செல்வாக்கு சார்ந்தது அல்ல. பொதுமக்கள் பயன்பெறும் நலத்திட்டங்கள் சார்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு குறைந்தபட்ச பொதுநலன் உணர்வு, மனசாட்சி வேண்டியதாகவுள்ளது. புதிய நூற்றாண்டு, மனித குலத்துக்கு பலப்பல வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. அதை தற்போதைய அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் கோயம்புத்தூர் போன்ற வளர்ந்துவரும் நகரங்களுக்கு உட்கட்டமைப்பு உள்பட பல வசதிகள், வாய்ப்புகள் அதிகம் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் இதுபோன்ற சிறு செயல்களில் ஈடுபட்டு கிடைத்ததை நமக்குள்ளே சண்டையிட்டு கூத்தாடி, கூத்தாடி போட்டு உடைத்து விடக்கூடாது. ‘வாராது போல் வந்த மாமணியான’ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கோயம்புத்தூர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை.