‘மனித ரூபத்தில் இருக்கும் கடவுள், விவசாயிகள்’

பாரதிய ஹிந்து பரிவார் இயக்கத்தின் மாநில தலைவர் செல்வகணேஷ் நேர்காணல்

மாற்றத்தை நோக்கி ஒருவன் செல்கிறான் என்றால் அவன் தன் வாழ்க்கையில் ஒரு புது அனுபவத்தை உணரப் போகிறான் என்று அர்த்தம். என் பயணம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது என்று சொல்லும் ஒரு நபரைக் குறித்து அறிந்தோம். அவர்தான் பாரதிய ஹிந்து பரிவார் இயக்கத்தின் மாநிலத் தலைவர் செல்வகணேஷ் அவர்கள். ஒரு பரபரப்பான அழகான மாலை நேரத்தில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களைக்  குறித்து காண்போம்.

‘என்னைப் பற்றி சொல்வதற்கு முன்பு என் பாரதிய ஹிந்து பரிவார் குடும்பத்தினர் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறு வயதில் நான் தனிமையில் சிந்திப்பது அதிகம். மற்றவர்கள் சொல்லும் வேலைகளை செய்வதைவிட, நமக்குப் பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். சிறு வயதில் நாம் எடுக்கும் முடிவு நம் வாழ்வின் சரித்திரத்தை மாற்றக் கூடியது. அதில் நல்லது எது, கேட்டது எது என்று மட்டும் பார்த்தல் போதும், வாழ்க்கை அழகாக இருக்கும். ஒரு மனிதன் வாழ கல்வி முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அனுபவப் பாடம் முக்கியம் என்பதை ஆழமாக நம்புபவன் நான்.

சிறு வயதில் விவசாயிகள் வேலைக்குச் செல்வதை பார்த்திருக்கிறேன். அதிகாலையிலேயே அவர்கள் அந்த தினத்தின் மதிய உணவை எடுத்துக்கொண்டு வேகமாக செல்வார்கள். ஒருநாள் இவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று சென்று பார்த்தேன். சேற்றில் கால் பதித்து வேர்வை சொட்டசொட்ட நாத்து நடுவதைப் பார்த்தேன். மதிய உணவு வேளையில் பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வேகமாக வேலை பார்ப்பார்கள். சாயங்காலம் வேலை முடிந்தவுடன் உடல் அசந்து வீட்டுக்கு வருவார்கள். அப்போது, இப்படி இவர்கள் உழைப்பதனால் இவர்களுக்கும் மகளுக்கும் என்ன பயன் என்று சிந்தித்தேன். அப்போது என் பெற்றோர் கூறியது என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. அவர்கள் சேற்றில் கால் வைத்து வேலை செயதால் மட்டும்தான் நமக்கு உணவு கிடைக்கும் என்றார்கள்.

நம் பசியைப் போக்க ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள் என்ற விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதற்குப் பிறகு மனித ரூபத்தில் இருக்கும் கடவுள், விவசாயிகள் என்பதைப் பல இடங்களில் என் நண்பரிகளிடம் அடிக்கடி சொல்லுவேன்.

அந்தக் காலம்போல் தற்போதில்லை. வேகமான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம் நாட்டில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதை என்னால் எப்படி தனி மனிதனாக செய்ய முடியும். அப்போது பாரதிய ஹிந்து பரிவார் இயக்கத்தின் சமூகப் பொறுப்பு எனக்குப் பிடித்திருந்தது. இயக்கத்தில் சேர்த்தேன். நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் நம் நாடு வளம் பெற வேண்டி செய்யக்கூடிய திட்டங்கள் எனக்குப் பிடித்திருந்தது. அவரைப் பின்தொடர்கிறேன்.

சமூகப் பணி செய்வதற்கு பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் மூலமாக எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் பொறுப்பு ஏற்றேன். அச்சமயத்தில், நம் இயக்க நண்பர்களுக்கு சொல்லிக் கொண்டது ஒரே விஷயம்தான், நாம் எல்லோரும் ஒரே குடும்பம். நம் குடும்பத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அது நம் கடமை என்று தெரிவித்தேன். அதன்படி என் பாரதிய ஹிந்து பரிவார் குடும்பம் மிகவும் வேகமாக செயல்பட்டு நல்ல பல திட்டங்களை செய்து வருகிறார்கள். கல்வி, தண்ணீர் ஆகியவை நமது முதல் தேவை. அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்ய நம் இயக்கம் வேகமாக செயல்பட்டு வருகின்றது. அதேசமயம், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களைப் பற்றி மக்களுக்கு ஒரு புரிதல் இல்லை. எனவே, மத்திய அரசு திட்டம் நமக்கு எந்த அளவுக்கு பயன் தருகிறது என்பதைக் கழக நண்பர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

நம் நாட்டில் பல கோவில்கள், குளங்கள் சரி செய்யப்படாமல் இருக்கின்றன. அதனை மிக விரைவில் சரி செய்ய பல வழிகளில் முயன்று வருகின்றது பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம். நம் நாட்டில் யாரும் நாத்திகர்கள் கிடையாது. உண்மையில், நமக்கு ஆன்மிகத்தின் மீது சரியான புரிதல் இல்லை, அவ்வளவே. நானும் ஒரு காலத்தில் கடவுளை நம்பி, நம்பாமல் இருந்தேன். அப்போது நாம் ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் சென்று நம் முன்னோர்கள் காலத்தால் ஆன்மிகம் எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள ஆன்மிகப் பயணம் மேற்கொண்டேன். அதன் பின்னர்,  ஆன்மிகம் நம் நாட்டின் அஸ்திவாரம், அதனை நம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து எங்கள் இயக்கம் சார்பில் பல யாகங்கள், இடிந்து கிடக்கும் கோவில்கள் சரி செய்தல் என பல பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கரூரில் நடக்கும் மகா பிரபஞ்ச யாகம் அதன் முதல் படி. யாகத்தில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் இலட்சியப் பாதையில் எனக்கு பக்கபலமாக இருக்கும் பாரத பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. சாதிக்க நல்ல எண்ணம் வேண்டும். அந்த எண்ணத்தை மேம்படுத்த நல்ல இயக்கம் வேண்டும். அந்த இயக்கத்திற்கு நல்ல கொள்கைகள் வேண்டும். அதன் மூலம் நாடு வளம் பெறும். அப்படியான இயக்கம்தான் எங்களது இயக்கம். எங்களது சமூகப் பணிகள் மூலமாக வரும் காலங்களில் அமைதியான, அழகான, ஆன்மிக நாடாக நமது நாடு இருக்க, எல்லோரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அழகான, சந்தோஷம் நிறைந்த பாரதம் அமைய நாம் அனைவரும் கைகோர்ப்போம்.’