86வது ஆண்டாக தண்ணீர் திறப்பு

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும், விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில், அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியுள்ளதால், இன்று (செவ்வாய்கிழமை)  டெல்டா பாசனத்துக்கு, தண்ணீர்  திறந்துவிடப்பட்டது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையை திறந்து வைத்து காவிரியாற்றில் மலர்தூவினார். முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பு மூலம் டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். கால்வாய் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர், ஜனவரி  28ம் தேதி வரை பாசனத்துக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பேட்டி:

முதல்வர் பழனிசாமி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட பிறகு அவர் கூறுவதாவது; மழை காலதாமதமாக பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும். சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் – கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் மேம்படுத்தப்பட உள்ளன. காவிரி குறுக்கே ஒரு தடுப்பணைக்கான பணிகள் துவங்கியுள்ளது. ஒரு தடுப்பணைக்கான பணி துவங்க உள்ளது. காவிரி நதி நீர் இணைப்பை நிச்சயமாக அதிமுக அரசு சாத்தியமாக்கும். காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்திற்கு 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மேடான பகுதிகளுக்கு மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு செல்லும் திட்டம்.

86வது ஆண்டாக தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையின் வரலாற்றில், இன்று 86-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில்,16 முறை குறிப்பிட்ட தினமான ஜூன் 12ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு (2018) ஜூலை 19ம் தேதி, நீர் திறக்கப்பட்டது. முன்னதாக 17ம் தேதி, அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. ஜூலை 23ம் தேதி அணையானது 4வது  முறையாக நிரம்பி வழிந்தது. அதன்பிறகே உபரிநீர் வெளியேற்றப்பட்டது.