வேண்டும் நாடு தழுவிய விழிப்புணர்வு!

‘‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’’ ஆனால் வாழ்க்கைக்குத்தேவை என்ன என்று கேட்டால்சிறுகுழந்தை, பெரிய குழந்தையோடு குடும்பம் மொத்தமும் திருதிருவென விழிக்கும்என்பதுதான் உண்மை.

வாழ்க்கைக்குத்தேவையான கல்வியை எப்படி தேர்ந்தெடுப்பது? எப்படி பணத்தை சேமிப்பது? உடல்நலத்தைப்பேணி பாதுகாப்பது எப்படி? இதுகுறித்த விழிப்புணர்வு மக்களால்பலருக்கும் கிடையாது. காரணம் இவையெல்லாம் வாழ்வில் முக்கியமானவை என்று நமக்கு சொல்லிக் கொடுக்கப்படவே இல்லை.

அதற்குபதிலாக, வாழ்க்கையில் வாங்கவே போகாத ‘ஆடி’ கார் விலை, பொழுதுபோக்காக பார்க்கவேண்டிய கிரிக்கெட்டை வேலையைக் கெடுத்துக் கொண்டு பார்ப்பது, நாள் தவறாமல் சீரியல் பார்ப்பது என்று பலதும் நம் மண்டையில் நன்கு குடியேறி இருக்கிறது. இதுதான் நமது சமூகத்தில் நடைபெறும் பல விபத்துகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணங்களாக இருக்கின்றன.

இதில் மிக முக்கியமானது, உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இல¢லாமை ஆகும். ‘சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்’ என்பதுபோல நல்ல உடல் நலம்தான் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை என்பது தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது. இதுகுறித்த செய்திகள் பல பெரியவர்களுக்குக¢ கூட தெரிவதில்லை. நோய் என்றால் அது ஏதோ தானாக வந்ததுபோல விதி என்ற எடுத்துக்கொள்வது, கண்டவர்கள் சொல்லும் அறிவுரைகளை எல்லாம் எடுத்துக்கொள்வது என்றுதான் தற்போது பலரின் நிலையும் இருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமை; நோய் எதுவும் ஏற்படும் முன்பே நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காதது; உடல் நலம் பாதித்தால்என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது; பாதித்தபிறகு திகைத்து பதறுதல்; குறிப்பாக உடல்நலம்பாதிக்கப்பட்ட வேளையில்பணத்திற்கு அலைமோதுவது; மருத்துவக்காப்பீடு குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் இருப்பது; மருத்துவ சிகிச்சைக்காக கடன் வாங்கி சிரமத்தில் சிக்குவது என்றுதான் நம்நாட்டில்பலரின் வாழ்வு செல்கிறது.

இதுகுறித்த விழிப்பணர்வு பள்ளிப்பருவம் தொடங்கி பணிபுரியும் இடம் வரை ஒவ்வொருவருக்கும்வழங்கப்பட வேண்டும். அதனை அரசு முறையாக நடவடிக்கை எடுத்து உதவிவேண்டுவோர்குறித்து உறுதி செய்து அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும். உலகிலேயே அதிகமான பார்வையற்றோர் தொடங்கி அதிக சர்க்கரை நோயாளிகள் வரை உள்ள நாடு இந்தியாதான்.

இந்த நிலை மாற்ற வேண்டுமானால் உடல்நலம் குறித்த நாடு தழுவிய விழிப்புணர்வு இயக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். ‘‘டீமானிட்டைசேஷன்’’ எனும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைபோல, ஜி.எஸ்.டி. வரி அமல் செய்யப்பட்டதுபோல இதற்கும் ஓர்அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்ல உடல் மற்றும் மன நலம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல. நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி என்ற அனைத்துமே அதில்தான்அடங்கி உள்ளது என்பதை அரசாங்கம்உணர வேண்டும்.

முதலில் நாட்டின் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் தொகையின் மதிப்பை அதிகரிக்க வேண்டும். அடுத்ததாக நாட்டு மக்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும் காப்பீடு குறித்து ஒரு தெளிவான, தனியாருடன் போட்டியிடும் அளவு திட்டங்கள் வேண்டும். அரசு மருத்துவமனை என்றாலே முகம் சுளிக்க வைக்கும் அவல நிலை மாற வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் உள்ள 130 கோடி பேரும் சர்வதேச தரம் வாய்ந்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வாய்ப்பு பெற்றவர்கள் இல்லை. அதற்காக அவர்கள் நோயில் வாடப்பிறந்தவர்கள்அல்ல என்பதையும்எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு அவர்களுக்கும்வேண்டும்என்பதையும்உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

முதலில் குடிநீர் என்பது சுத்தமானதாக, பாதுகாப்பானதாக, தேவையான அளவு மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எல்லோராலும் மினரல் வாட்டர் வாங்கி காலம் தள்ள முடியாது. அதைப்போலவே பல கிலோமீட்டர் நடந்துசென்று தண்ணீர் சுமக்கவும் முடியாது. இன்று தண்ணீருக்காக இந்தியாவில் நடைபெறும் சச்சரவுகள் மிக அதிகம். அவற்றைத்தீர்க்கும் வகையில் முதலில் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் முதற்கடமையாகும்.

அதைப்போலவே உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிட்டோம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் இன்றும் ஆண்டுதோறும் அதிக அளவு உணவு தானியங்கள் வீணாவது நமது நாட்டில்தான். அதைப்போலவே சரியாகத்திட்டமிடாததால் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவும் இங்குதான் அதிகம். இந்த நிலையை மாற்றி சரியான நுண்ணூட்ட சத்துகள் அடங்கிய உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன்மூலம் நாட்டு மக்களின் உழைக்கும் திறன் அதிகரிக்கும்.

அடுத்ததாக, மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் இன்று விண்ணில் பறக்கின்றன. அதிலும் உய¤ர் காக்கும் மருந்துகள் என்பது சாதாரண மக்களுக்கானதாக இருப்பதில்லை. உதாரணத்துக்கு, தற்போது நெஞ்சு வலி என்றாலே ஸ்கேன் செய்து பார்ப்பதும் அறுவை சிகிச்சை செய்வதும் நடக்கிறது. இதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இதய அறுவை சிகிச்சையில் பயன்படும் ‘ஸ்டெண்ட்’ எனும் மருத்துவ உபகரணமானது வெளிநாடுகளில் இருந்து நம் பண மதிப்பில் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதைப்போல தனியார் மருத்துவக்கட்டணங்கள் முறைப்படுத்த வேண்டும்.

கூடவே அரசாங்க மருத்துவமனைகள் அவ்வளவு இயல்பாக முன்னேற முடியவில்லை. மருந்துகளும், மருந்து விலைகளையும் கட்டுப்படுத்தும் உரிமை அரசாங்கத்தின் கையில் இருந்தும் மக்களுக்கு ஏனோ நல்லது நடப்பதுபோல தெரியவில்லை.

எனவே இதுகுறித்த நாடு தழுவிய விவாதம் ஏற்படுத்த வேண்டும். அதில் படிப்படியாக மேற்சொன்ன சிக்கல்களை களைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிப்பாடத் திட்டத்தில் அவரவர் வகுப்புக்கு ஏற்ற வகையில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது ஏதோ மருத்துவம், சிகிச்சை என்பதோடு நின்றுவிடாமல் மருத்துவ சிகிச்சை, ஊட்டச்சத்து, மருத்துவக்காப்பீடு என்று எல்லா தளங்களுக்கும் பரந்து விரிய வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போர்க்கு கவுன்சலிங் மையங்கள் அமைத்து அவற்றின் சார்பில் வழிகாட்ட வேண்டும். ஆன்லைன் மருத்துவம் தொடங்கி அனாமத்து மருத்துவம் வரை எல்லாவற்றையும் சரியாக முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் சாத்தியமாகும். இல்லையென்றால், நம் எதிர்காலம் வெறும் காணல் நீராக மாறிவிடும்.

– ஆசிரியர் குழு.