தடம் மாறுகிறதா தொழில் உறவு?

கோயம்புத்தூர் என்றதுமே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அதன் தொழில் வளர்ச்சியும், தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு ஆண்டுகள்? எவ்வளவு தொழிற்சாலைகள்? எவ்வளவு போராட்டங்கள்? அத்தனை லாப, நஷ்டங்கள்? எத்தனை மோதல்கள்? எத்தனை வழக்குகள்? எண்ணிப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

கோயம்புத்தூரின் முதல் பெரிய தொழிற்சாலையான ஸ்டேன்ஸ் மில் எனும் சி.எஸ்.அண்ட் டபிள்யூ மில்ஸ்  உருவாகி கிட்டத்தட்ட நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதனைத் தொடர்ந்து பல பஞ்சாலைகள் உருவாகின. மோட்டார் பம்ப் தொழிற்சாலைகள் உருவாகின. பவுண்டரிகள் உருவாகின. இன்னமும் பல சிறியதும் பெரியதுமான தொழிலகங்கள் உருவாகின.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து முதல் ஐம்பது ஆண்டுகள்  எல்லா துறைகளுக்கும் வளரும் பருவம் என்றே சொல்லலாம். நீராவி இஞ்சின் போய் மின் மோட்டார் வந்தது. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பலர்  தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக உரு மாற்றம் பெற்றார்கள். கூடவே தொழில் நுட்ப படிப்பு படித்து திறன் மிகு தொழிலாளர் ஒருபுறமும் சொந்தத் தொழிலாளர் ஒரு புறமும் உருவாகினர். கூடவே தொழிற்தகராறுகளும் உருவாகி வளர்ந்தன.

அக்கால கட்டத்தில் உலகெங்கும் உருவான தொழிலாளர் ஆதரவுக் கொள்கை இங்கு தொழிற்சங்கமாக நிலை கொண்டது. வ.உ.சிதம்பரம்பிள்ளை, என். எஸ். ராமசாமி அய்யங்கார் முதலியோர் தொடக்க கால தொழிற் சங்க வழிகாட்டிகளாக விளங்கினார்கள். அவர்களை தொடர்ந்து தொழிற்சங்கத்தோடு விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டு தொழிலாளர்களுக்கு வழிகாட்டிகளாக திகழ்ந்தவர்கள் என்.ஜி. ராமசாமி, ஜீவா போன்றோர் ஆவர். இந்த தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் போராட்டங்களோடு கோயம்புத்தூரில் தொழில் வளமும் வளர்ந்ததுதான் அதிசயம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கோரி பல வகையான போராட்டங்கள் வெடித்தன. தொழிற்சாலை நடத்துவோர், பணி புரிவோரிடையே தொழில் தொடர்பான கருத்து வேறுபாடுகள் உருவாகி தொழிற்சாலை வாயில்களில் தொடங்கி நீதி மன்றம் வரை வழக்குகள் சென்றன. தொழிற்சங்கங்கள் இடையேயும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் வெடித்தன. சில  நேரங்களில் இந்த தொழிற்துறை தொடர்பான சிக்கல்களுக்குள்  வன்முறையும் புகுந்து கொண்டு உயிர்ச்சேதம் வரை ஏற்படுத்தியதுண்டு.

1950கள் வரை வன்முறை என்பது தொழிற்சங்க போராட்டங்களில் வன்முறை என்பது சாதாரணமான ஒன்று. காவல்துறை தாக்குதல்,  சகோதர தொழிற்சங்கங்களுக்குள் மோதல்கள் என்பவை சகஜமாக நிகழந்ததுண்டு. ஆனால் அதன் பிறகு அது படிப்படியாக குறையத்தொடங்கியது.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல வகையான தொழிலாளர் நலச்சட்டங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டன. தொழில் நடத்துவோரும் தங்களுக்கென தனி அமைப்புகளை உருவாக்கிக்கொண்டனர். இடையில் ஒரு இணைப்புப்பாலமாக அரசாங்கம் நின்று தொழிற்துறையில் அவ்வப்போது ஏற்படும் தகராறுகளை பேச்சுவார்த்தை மூலம் சட்டப்படி தீர்வு காண உதவி வந்தது.

மெல்ல மெல்ல தொழிற் தகராறுகளுக்கு ஆவேசமாக தீர்வு காணும் போக்கு குறைந்து பேச்சுவார்த்தை, மற்றும் ஒப்பந்தம் மூலமாக தொழிற்சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. தொழில் நடத்துவோர், மற்றும் தொழிலாளர் என இருதரப்புமே கல்வியறிவும், சட்டமும் தெரிந்தவர்களாக இருப்பதால் போராட்டங்களின் வடிவம் மாறி விட்டது. வன்முறை என்பது கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்டது.

இன்னும் சில நேரங்களில் தொழிற்சங்கங்கள் அதன் பழைய வீரியத்தை இழந்து விட்டதோ என சொல்லும் அளவுக்கு அவை அமைதியாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது. அதைப் போலவே தொழிற்சாலை நிர்வாகமும் தொழிலாளர்களை அடிமைகளாக பார்த்து வந்த மனோபாவம் மாறி விட்டது.

ஆனால் இன்னும் சில இடங்களில் அந்த தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடையே பரஸ்பரம் நம்பிக்கையற்ற போக்கும், வன்முறைப்போக்கும் அவ்வப்போது தலைகாட்டுவது உண்டு. அதற்கு ஒரு எடுத்துக் காட்டுதான் பிரிக்கால் தொழிற்சாலையில் அவ்வப்போது நிகழும் சில தொழிற்தகராறுகள். கோவையின் தொழிற்சாலை மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பல ஏடுகள் உண்டு. என்றாலும் கடந்த சில பத்தாண்டுகளாக அப்படி இல்லை.

இந்த நிலையில் 2007 – 2010ம் ஆண்டு பிரிக்கால் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு வன்முறை சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. ஒரு அதிகாரி மரணமடைந்தார். தொழிலாளர்கள் பலர் அதற்காக நீதி மன்ற வாசல்களை ஏற வேண்டியதாயிற்று. கோவையின் தொழில் வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியும் விழுந்தது.

தற்போது மீண்டும் ஒரு உரசல் ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழக விவசாயிகள் டில்லி வரை சென்று நடத்திய போரட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. அந்த வகையில் கோவையில் உள்ள தொழிற்சாலைகள் பலவும் கலந்து கொண்டன. சில தொழிற்சாலைகள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தன. அதில் தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்காத அளவுக்கு ஒரு விடுமுறை நாளில் பணியும் செய்து வேலை நிறுத்த நாளை ஈடு செய்த தொழிலாளர்களும் உண்டு.

இந்த நிலையில் தான் பிரிக்கால் தொழிற் சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நாளன்று உற்பத்தி பாதிக்கும் அளவு சூழல் ஏற்பட்ட போது நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் என இருதரப்பும் பேசியதில் இது குறித்து எவ்விதமான ஒத்த கருத்தும் ஏற்படவில்லை. இதில் நிர்வாகம் மற்றம் தொழிற்சங்கங்கள் தங்கள் தரப்பை நியாயத்தைக் கூறினாலும் கூட மொத்தத்தில் நடந்தது இதுதான்.

குறிப்பிட்ட 25.04.2017 அன்ற ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த சுமார் 800 தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் தொடர் விளைவாக சட்டப்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் எட்டு நாள் சம்பளத்தை நிர்வாகம் பிடிக்கும் படி உத்திரவிட்டது.

தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருதரப்பும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைப்படி நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதாக உள்ளன.

என்றாலும் வாட்ஸ் அப் போன்றவை தொடங்கி சில செய்தி ஊடகங்கள் வரை பல்வேறு கருத்துகள் பரப்பப் பட்டு வருகின்றன. அவை இப்பகுதியின் தொழில் நல்லுறவை பாதிப்பதாக அமையலாம். எதிர்கால தொழில் உறவுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக கூட மாறலாம். இருதரப்பிலும் சட்ட நியாயங்கள், தொழிலாளர் உணர்வுகள் என்று பலவும் இருக்கலாம். ஆனால் அதை சரியான முறையில் அணுகாமல் முறையாக எடுத்துச்செல்ல வில்லையென்றால் சிக்கல் வேறுபக்கமாக திசை திரும்பிவிடும்.

கோவையைப் பொறுத்தவரை தொழிலாளர்களும் நலமாக இருக்க வேண்டும்.தொழில் நடத்தும் நிர்வாகத்தினரும் நலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில்கள் நல்ல முறையில் நடக்கும். கிட்டத்தட்ட இது ஒரு குடும்பத்தில் உருவாகும் பிரச்சினையைப் போல. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான் மற்றவர்களை விட இந்த பிரச்சினையின் ஆழம் புரியும். எனவே இதை மேலும் தொடராமல் இது குறித்து பொது வெளியில் கருத்துக்களை பரப்புவதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டியது இருதரப்பின் கடமையாகும்.

அவ்வையார் வரப்புயர என்ற சொன்னதைப் போல இங்கு உற்பத்தி நடைபெற வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலையும் தொழிலாளர்களும், நிர்வாகமும் நலமும், வளமும் பெற முடியும். இந்த ஊரும்; நாடும் பயன் பெற முடியும். ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரி, திறன்மிகு தொழிலாளர் பற்றாக்குறை என்று பல தொழிற்சிக்கல்களால் கோயம்புத்தூர் பாதிக்கப் பட்டிருக்கும் போது புதிய சிக்கல்கள் உருவாகாமல் இருப்பது நாட்டுக்கும் நல்லது; வீட்டுக்கும் நல்லது.

– ஆசிரியர் குழு.