திசைகளைத் திரும்பிப் பாருங்கள்!

அமுதப்பால் கொடுத்து வளர்ப்பவள் பெற்றதாய். அறிவுப்பால் கொடுத்து உயர்த்துபவள் கல்வித்தாய். அன்னப்பால் கொடுத்துக் காப்பவன் தொழில்தாய். இம்மூன்று தாய்களையும் நாம் உயிருள்ளவரையில் உணர்வில் கலந்து உயிருக்கு உயிருக்காக மதித்துப் போற்ற வேண்டும்.

தாய் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் என்பார்கள். ஆம்! ஒரு குழந்தை எல்லாவற்றையும் தனது தாயிடம் இருந்துதான் முதலில் கற்றுக் கொள்கிறது. தாயின் மடியில் தான் சொர்க்கம் என்றார் நபிகள் நாயகம். ஒருதாய் பத்துக் குழந்தைகளுக்குச் சோறு போட்டு வளர்த்தாலும், பத்துக் குழந்தைகளும் சேர்ந்து ஒரு தாய்க்குச் சோறு போடுவதில்லை என்பதுதான் நிகழ்கால நிஜம். தாய்க்கு உணவளிப்பது இறைவனுக்கு விருந்துபடைப்பதற்குச் சமம் என்பார் எங்கள் சச்சிதானந்தா பன்னாட்டுப் பள்ளியின் துணை முதல்வர் முனைவர் சக்திவேல் அவர்கள். தாயை வணங்குவோருக்குத் தோல்விகளும் துன்பங்களும் இல்லை. பெற்றதாய் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்கிறாள்.

ஆனால் கல்வி உலகை குழந்தைக்கு அறிமுகம் செய்கிறது. மேலும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு காரணமாக இருப்பது நமது தொழில். செய்யும் தொழிலின் மூலமாகத்தான் நமது ஆற்றலும் திறமையும் வெளிப்படுகிறது. வேறு தொழில் நமக்கென ஒரு இடத்தில் வரலாற்றில் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆகவே, ஒவ்வொரு மனிதனும், தன்னை ஈன்றெடுத்தத் தாய்க்கும், அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் உணவு கொடுக்கும் தொழிலுக்கும் ஆயுள் முழுவதும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். எந்த நிலைக்கு வந்தாலும் வந்த நிலையை மறக்கக் கூடாது. அவ்வாறு மறக்காமல், அதை நெஞ்சில் சுமந்து வாழ்பவர்களை மாமனிதர்கள் என்று போற்றலாம்.

சமீபத்தில், கோவை, சீரநாயக்கன் பாளையம் ச.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேனிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்தேன். அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் விழாவிற்கு ஏற்பாடுகளை முன்நின்று சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஏழைக்கு எழுத்தறிவித்தலே அறங்களில் எல்லாம் சிறந்தது என்றார் மகாகவி பாரதி. அந்த அமுதவாக்கிற்கிணங்க, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, பூல்சந்த், வீர்சந்த் ஆகிய சகோதரர்களால் இப்பள்ளி நிறுவப்பட்டது. தயாள குணமும் தாராள மனமும் படைத்த அவர்களுடைய வழித் தோன்றல் திருமிகு சம்பத் அவர்கள் தற்போது பள்ளியைத் திறம்பட நிர்வகித்து வருகின்றார்.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சரவணன் அவர்கள் நன்னெறி காட்டுதலினாலும், அனைத்து ஆசிரியர்களீன் பூரண ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாகவும் பள்ளி இறுதித் தேர்வுகளில் பல ஆண்டுகளாக நூறு சதவீதச் தேர்ச்சி பெற்று ஒளிர்கின்றது.

ஐம்பது ஆண்டுகளான, இப்பள்ளியைப் புதுப்பிப்பதற்காக முன்னாள் மாணவர்கள் ஒன்றினைந்து ரூபாய் முப்பது இலட்சத்திற்கும் அதிகமான தொகை கொடையாக வழங்கியுள்ளார்கள். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பல்விதமான மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதை ஊக்குவித்தவிதம் பாராட்டுக்குரியது. அத்துடன் கடந்து வந்த பாதையின் சுவடுகள் அடங்கிய நிகழ்படக் கண்காட்சியும் வைத்திருந்தார்கள்.

இப்பள்ளியின் முதற்தலைமை ஆசிரியர், அமரர் சுப்பிரமணியன் அவர்களைத் தொடர்ந்து பணியாற்றிய அனைத்துத் தலைமையாசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் பங்களிப்பும், சேவையும் நினைவு கூறப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திரு. கணேச மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் மிகவும் எளிமையானவர். எல்லா நிலையில் உள்ளவர்களும் எளிதில் இவரைத் தொடர்பு கொள்ள முடியும். அகந்தை அற்ற அன்புள்ளம் கொண்ட அவரை எந்நாளும் வாழ்த்துவேன்.

ஒரு புத்தகம் போதும் உங்களைப் புரட்டிப் போடுவதற்கு, ஒரு சொல் போதும் உங்களை ஊக்கப்படுத்தி உசுப்பி விடுவதற்கு, ஒரு நண்பர் போதும் உங்களை நல்வழிபடுத்துவதற்கு. ஆம்! ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பனுக்குச் சமம். ஆனால் ஒரு நல்ல நண்பனோ ஒரு நூலகத்திற்குச் சமம் என்பார்கள்.

கோவை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், திரு.இரமேஷ் அவர்கள் தான், இப்பள்ளியின் பொன்விழாவிற்கு கிரியாஊக்கியாக இருந்து, ஒவ்வொருவரையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தி விழாவை வெற்றிச் சிகரத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், இயல்பாகவே உதவும் மனப்பான்மையுடன் திகழும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.

பண்புகளிலேயே தலைசிறந்த பண்புகள் எதுவென்றால், ஒன்று நன்றிமறவா நற்குணம், இரண்டாவது, நல்லதைக் கண்டால் பாராட்டும் விரிந்த மனம் இவ்விரு பண்புகளையும் தன்னகத்தே கொண்ட தன்னிகரில்ல தனிச் சிறப்புமிக்க மாமனிதர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

இப்பள்ளியின் மாணவர்கள், நற்பண்பு நலன்களும், ஆற்றல் திறனும் கொண்டவர்களாகத் திகழ்வதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிரேன். இப்பள்ளியில் பயின்ற திரு. எஸ்.எஸ். இராஜேந்திரன் எங்கள் ரூட்ஸ் மல்டிகிளின் லிமிடெட் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார். “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்“ என்பது பழமொழி.

அரசு பள்ளிகளில் ஆற்றலும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்க ஆசிரியர்கள் இருந்தாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மாணவர்களைத் திறன்மிக்கவர்களாக உருவாக்குவது சிரமம். நவீன கல்வி உபகரணங்கள் தனியார் பள்ளிகளில் இருப்பதைப் போல அரசுபள்ளிகளிலும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மென்திறன் வகுப்பறை (ஷினீணீக்ஷீt ஙிஷீணீக்ஷீபீ) மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரும் போது, ஒலி ஒளிக் காட்சிகளின் மூலம் கற்கும் பாடத்தை எளிதில் மனதில் பதியவைத்துக் கொள்ளமுடியும். இப்பள்ளியில், மென்திறன் வகுப்பறை உள்ளது.

சென்ற ஆண்டு, ரூட்ஸ் நிறுவனங்கள் மூலமாக, சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, மற்றும் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி உற்பட 16 அரசு பள்ளிகளுக்கு சுமார் 30 இலட்ச ரூபாய் மதிப்பிலான மென்திறன் வகுப்பறை (Smart Class Room) ஏற்பாடு செய்து தரப்பட்டது. அதற்காக ரூட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் திரு. கே.ராமசாமி அவர்களை அனைவரும் பாராட்டினார்கள். அத்துடன், மென்திறன் வகுப்பறை மூலம் கற்கும் மாணவர்களின் ஆர்வமும் அறிவுத்திறனும் மேம்பட்டுள்ளதாக சின்னத்தடாகம் அரசு ஆண்கள் பள்லியின் தலைமையாசிரியர்                                    திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னிடம் கூறி மகிழ்ந்துள்ளார்.

அரசு பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களும் தொழில் நிறுவனங்களும் கைகோர்த்துச் செயல்பட்டால் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி ஒளிமயமான தமிழத்தை உருவாக்க முடியுமல்லவா!

முன்னாள் மாணவர்களே சிந்தியுங்கள். நான் பயின்ற கல்வி நிலையங்களில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு உதவி வருகிறேன். நீங்கள் உதவிக் கரம் நீட்டினால் உங்களுக்கு மன நிறைவு பெருகும் நாட்டின் மனிதவளம் உயரும்.

முன்னாள் மாணவர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டிவிட்டு விழாவில் இருந்து விடைபெற்றேன். விழாவின் நினைவாக, பள்ளியின் ஆங்கில ஆசிரியரும், கோவை அரசு கல்லூரியில் பயின்று எனது நெஞ்சுக்கு நெருக்கமான நண்பருமாகிய திரு. சம்பத்குமார், கல்லூரிக் காலங்களை நினைவூட்டும் புகைப்படம் ஒன்றை வழங்கி மகிழ்ந்தார்.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

 

சிந்தனைக் கவிஞர்.டாக்டர்.கவிதாசன்,

இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை,

ரூட்ஸ் நிறுவனங்கள்.