நமிதாவுக்கே என் ஓட்டு!

‘பிக்பாஸ்’, பல புதிய, புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையான ‘ஸ்டார் விஜய்’ இன் தற்போதைய ஊரறிந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் குறித்து எந்தக் கருத்தும் நேர்மறை, எதிர்மறையாக இங்கே கூறப்போவதில்லை. ஏனெனில் தற்போது எதற்கெடுத்தாலும் தமிழன்டா என்று எகிறிக்கொண்டு வருகிறார்கள். எந்த புதியத் திட்டம் வந்தாலும் யோசிக்காமல் அது தவறு என்று திமிறிக்கொண்டு வருகிறார்கள். ஒருவேளை அவர்களின் கருத்தில் உண்மையும் இருக்கலாம்?! ஆனால் எகிறுவது, திமிறுவதைவிட தமிழனாக வாழ்ந்துவிட்டுப்போவது சரியானது என்பது என் கொள்கை. ஆகவே, அதைப்பற்றி இங்கே நான் கருத்தாட வரவில்லை. பிறகு நமீதாவுக்கு எதற்கு ஓட்டு?!

பொதுவாக, ஒழுக்கம் என்பது இரண்டு வகை. தொன்மையான தமிழில் ஒழுக்கத்தை ‘‘அகம், புறம்’’ எனலாம். எளிமையாக, தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கம் எனலாம். தனிமனித ஒழுக்கத்தை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்றும், ‘யாரும் உன்னை கவனிக்காதபோது நீ எப்படி நடந்துகொள்கிறாய்?’ என்பதைப் பொறுத்தும்; பொது ஒழுக்கத்தை, பத்து பேர் அல்லது ஓர் சமுதாயத்தில் அல்லது ஒரு குழுவில் நீ எப்படி நடந்துகொள்கிறாய்? ஒரு சபையில் எவ்வாறு உன் நடத்தை உள்ளது? என்பதைப் பொறுத்தது.

‘‘பப்ளிக்ல கிஸ் அடிச்சா அது பாரின்; பப்ளிக்ல பிஸ் அடிச்சா அது இந்தியா’’ என்பது ஓர் திரைப்பட நகைச்சுவையான உண்மைக் கருத்து. பெரும்பாலும் நாம் வௌ¢ளைக்காரரகளைப் பார்த்து அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அவர்களிடமிருந்து நாம் கற்காத ஒரு காரியம், பொது ஒழுக்கம். அவர்களிடத்தில் நமது கலாச்சாரத்தை ஒப்பிடும்போது, அவருக்கு தனிமனித ஒழுக்கம் கிடையாது.

அவர்கள் எந்தப் பெண்மணியுடனும் எப்போதும், எங்கேயும், என்ன வேண்டுமானாலும் (அவளது விருப்பத்தின்படி) செய்வார்கள். ஆனால் ஓர் பொது இடத்தில் மிகவும் நேர்த்தியான, நேர்மையான பழக்கவழக்கத்தைக் கொண்டவன். நாம் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று தனிமனித ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்போம். ஆனால் பொது இடத்தில் முறையாக இருக்கிறோமா? இதுதான் நமக்கும் வௌ¢ளைக்காரர்களுக்கும் உள்ள வேற்றுமையில் ஒற்றுமை.

சரி. நமீதாவுக்கு வருவோம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பொதுமக்களுக்கு சொல்லப்பட்ட ஓர் நற்செய்தி என்னவென்றால், அது நமீதாவின் ‘‘பொதுக்கழிப்பறையை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது’’ என்பதுதான். நாம் வௌ¢ளைக்காரர்களைபோல் ஆடை உடுத்தினாலும், நாகரிகம் என்ற பெயரில் என்ன வகையான ஆடையை உடுத்தினாலும், அவர்களது ஆங்கிலத்தில நா கிழிய பேசினாலும் பொதுக் கழிப்பறையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை நமது திரையரங்குகள், பள்ளி, கல்லூரி, அலுவலகக் கழிப்பறைகள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பேருந்து, இரயில் நிலையக் கழிப்பறைகள், ஏன் கோயில் பொதுக் கழிப்பிடங்கள்கூட சாட்சி. இவற்றைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் நமது கழிப்பறைப் பழக்கம் எவ்வாறு சீர்கேட்டு உள்ளதென்று.

எனக்கென்ன? என்வேலை முடிந்தது. இதுதான் திருவாளர் பொது ஜனத்தின் கழிப்பறைப் பழக்கம். நாற்சந்து, முச்சந்து என்று பொது இடத்தில் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் நிற்பார்கள், உட்காருவார்கள். பலர் பயன்படுத்துவது என்றாலும் அதில் தண்ணீர் இருந்தாலும் ஊற்ற மாட்டார்கள். மாறாக, மேலும் மேலும் அசுத்தம் செய்துவிட்டு போய்விடுவார்கள். பொதுக்கழிப்பிடங்கள் இருந்தாலும் பாதையின் இருபுறமும்தான் போவார்கள்.

வீடுதோறும் கழிப்பறைத் திட்டங்கள் வந்தாலும், தனி மனிதத் திருத்தம் மட்டுமே சமுதாயத்திலும் வெளிப்படும் என்பது நிதர்சனம். அதைத்தான் நாம் நமது பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் என்பதே பொது ஒழுக்கத்தின் அடிப்படை.

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, குப்பைகளை வீசி எறிவது என்று எல்லாவிதமான தவறுகளையும் செய்யும் இந்திய மக்களுக்கு இதுபோன்ற பொதுநிகழ்ச்சியில் ஒரு நடிகையின் மூலமாக வெளிப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவது குறித்த விளக்கப் பாடம், ஒரு பாடமாக இருக்கும் என்பது என் கடைசிகட்ட நம்பிக்கை. அதற்காகவே எனது ஓட்டு, நமீதாவுக்கு.

– கா.அருள்.