குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் ஜெர்மனி வரை இளைஞர் பயணம்

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர்  குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் ஜெர்மனி வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளார். சென்னையை சேர்ந்த நரேஷ் என்பவர் , பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று வருகிறார். இந்நிலையில் , ஒவ்வொரு நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடப்பதால் , அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு பாதிக்கபட்ட சிறுவர்களுக்கு நிதி திரட்டி வந்து உள்ளார். இந்நிலையில் இந்தியாவிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற ஜனவரி மாதம் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த இருவர் அமரும் வகையில் உள்ள இந்த சைக்கிளில் யார் வேண்டுமானாலும் பின்னால் அமர்ந்து பயணம் செய்யலாம் எனவும், அதன் மூலம் ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.