கோவை  மாநகராட்சியில் மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணியினை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களின் பிரச்சார பணியினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 01.01.2019 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

சுகாதாரத்துறையுடன் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் மற்றும் வில்லைகளை பொதுமக்களிடம் விநியோகிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார். அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து சவுரிபாளையம், உடையாம்பாளையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் மற்றும் வில்லைகளை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளார்கள்.

இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை தன்னார்வலர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர்  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் .மதியழகன், மண்டல சுகாதார அலுவலர்கள், அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விக்டர், தலைமையாசிரியர் மெர்சி விக்டர், ராக்ரவீந்திரன் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.