வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.சி 43 ராக்கெட்!

புவி கண்காணிப்புக்கான ஹைசிஸ் மற்றும் இதர 30 சிறிய செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று அதிகாலை 5.48 மணிக்கு தொடங்கியது. இதன்படி இன்று காலை 9.58 மணி அளவில் ராக்கெட்டானது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. ஹைசிஸ் செயற்கைக்கோளானது, பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஹைசிஸ்-ஆனது, புவி கண்காணிப்பு, விவசாயம், எண்ணெய் மற்றும் தாது வளம், ராணுவ உளவு, கடலோர கண்காணிப்பு ஆகியவற்றுக்காக தயாரிக்கப்பட்டதாகும். இதன் வாழ்நாள் காலம் 5 ஆண்டுகள். புவி கண்காணிப்புக்கான புதுமையான அம்சங்களுடன் கூடிய ஹைசிஸ், புவியின் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் புகைப்படங்களை வழங்க உள்ளது.