கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் , அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளைத் தாக்கி கைது செய்த காவல் துறையை கண்டித்து விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் . சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் ஒயர்கள் செல்லும் மின்வழிப்பாதை மற்றும் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நெகம்ம் அருகே காட்டம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தனியார்  நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைத் தடுத்த விவசாயிகளை போலீசார் தாக்கி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டிக்கும் வகையில் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, தனியார்  நிறுவனம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான 300 க்கும் மேற்பட்ட  போலீஸ் துணையுடன் ஐந்து குழுக்கள் அமைத்து விவசாய நிலங்களை அளந்து உள்ளனர் .இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் விவசாயிகள் களைந்து செல்லாமல் அந்த திருமண மண்டபத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுடன் கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார் .அதில் உடன்பாடு ஏற்படாத்தால் விவசாயிகள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் சுல்தான்பேட்டையில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.