370 சட்டம் ரத்து செல்லும்; சட்டப்பிரிவு என்ன சொல்கிறது ?

சிறு-குறு மன்னர்கள் ஆட்சி செய்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியா உருவானது. அன்றைய காலத்தில் சுதந்திர இந்தியாவில் சில நிபந்தனைகளுடன் 1949-இல் ஜம்மு-காஷ்மீரை இணைக்க மன்னர் ஹரிசிங் சம்மதம் தெரிவித்திருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட அப்போதைய மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, 370 சட்டப் பிரிவைக் கொண்டு வந்தது. இந்த சட்டப்பிரிவு மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதி மக்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

அவைகள்.,

  • மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்டங்கள் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே அங்கு அமல்படுத்த முடியும். இதில், ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துக்களை வாங்க அனுமதி இல்லை. ஆனால் அம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
  • காஷ்மீர் பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அவர்களால் காஷ்மீரில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால், ஆண்களால் வாங்க முடியும். இந்திய அரசியல் சட்டத்தில் 238 வது பிரிவு இம்மாநிலத்துக்கு செல்லாது. மேலும், இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
  • அதேபோல், நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் 35ஏ சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்து தனி மாநிலமாக அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அறிவித்த நீதிமன்றம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் என 5 நீதிமதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.