10 கோடி ரூபாய் தாருங்கள்; இழப்பீட்டு கேட்க்கும் ஏ.ஆர் ரஹ்மான்!

ஏ.ஆர் ரஹ்மான் தரப்பிலிருந்து ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதியில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், சென்னையில் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிவரை தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டதாகவும், அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது, அந்த நிகழ்ச்சிக்காக ரூபாய் 29 லட்சத்து 50 ஆயிரம் முன்தொகையாக ரஹ்மானிடம் கொடுத்தாக கூறப்பட்டுள்ளது.

மேலும், திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்றும் அதனால், கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கடிதம் அனுப்பியதாகவும் அதற்கு ஏ.ஆர் ரஹ்மான் தரப்பிலிருந்து காசோலை அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வங்கியை அணுகியபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லையெனத் திருப்பி அனுப்பப்பட்டதால், பணத்தைத் திருப்பி தருமாறு கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், தற்போதுவரை எந்தப்பதிலும் இல்லை. ஆகையால் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத் தருமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  ஏ.ஆர் ரகுமான் தரப்பிலிருந்து இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், “மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு சுமத்துகின்றது. இது உண்மைக்குப் புறம்பானது. நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். ஆகையால், நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயைத்தர வேண்டும். இல்லையெனில், சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை சந்திக்க நேரிடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.