கற்பகம்  பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கற்பகம் நிகா்நிலைப்பல்கலைக்கழகத்தில், பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா அண்மையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரியின் டீன் அமுதா வரவேற்புரை வழங்கினார். அதனையடுத்து, கற்பகம் கல்விக்குழுமத்தின் தலைவர் இராச. வசந்தகுமார் பேசுகையில், “மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் தாய்நாட்டின் பெருமை உலகெங்கும் விரிந்துள்ளது.  அதிலும், தமிழனின் சிறப்பு எல்லையற்றது என்றார். மேலும், மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது குறித்தும், தேர்வுகளை அணுகுமுறை குறித்தும் எடுத்துரைத்தார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ அமைப்பின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை  கலந்துகொண்டார்.  அவர் பேசுகையில், ‘குறையாத ஆர்வம், தெளிவான திட்டமிடல்,  தளராத உழைப்பு, திடமான நம்பிக்கை, சமுதாயப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகள் மனிதனை முழுமையாக்குகின்றன; அத்தகைய பொதுநல நோக்கத்தால் நாடு உயர்கிறது. சந்திராயன் முதலான திட்டங்களின் வெற்றிக்கு அவ்வாறு உழைப்பவர்களே காரணமாகின்றனர். அவ்வகையில் இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் உழைப்பதே நாட்டின்  வளர்ச்சியாகும்., என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதில் கற்பகம் கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, கற்பகம் உயர் கல்விக்கழகத்தின் பதிவாளர் ரவி, கற்பகம் உயர் கல்விக்கழகத்தின் துணைவேந்தர் வெங்கடாசலபதி, தேர்வாணையர் பழனிவேலு, மாணவர் நலன் முதன்மையா் தமிழரசி, டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.