ராணுவத்தில் உள்ள வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் கர்னல் தினேஷ் சிங்தன்வர்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதுநிலை முதலாண்மாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா மற்றும் மாணவர் மன்றம் தொடக்க விழா, திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மேலாண்மைத் துறை இயக்குநர் பாமினி வரவேற்றார். கோவை, மெட்ராஸ் 110 இன்பேன்டரி பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் தினேஷ் சிங்தன்வர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசியதாவது: “முதலாமாண்டில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களுடைய வாழ்க்கை. இதில் எது சரி? எது தவறு? என்று தீர்மானிக்கக்கூடிய தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இக்கல்லூரியின் செயல்பாடுகளில் உங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இது உங்களுடைய கல்லூரி. ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். உங்கள் வெற்றிக்கான வழிகாட்டி இந்த கல்லூரியும், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள்தான் என்பதை நீங்கள் 100 சதவீதம் நம்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு அடிப்படையில் சில கடமைகள் உள்ளன. அதற்கு நீங்கள் பொறுப் பேற்றுக்கொள்ள வேண்டும். கல்லூரியின் வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும். அனைவரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் முன் ஏராளமான சவால்கள் உள்ளன. அதில் ஒன்று தொழில்நுட்பம். நாம் தான் தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். அதற்கு நாம்தான் தலைமை வகிக்க வேண்டும். மாறாக தொழில்நுட்பம் நம்மைக் கட்டுப்படுத்தும் நிலைக்குச் சென்று விடக்கூடாது. ராணுவத்தில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர் டீன்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கு, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாமாண்டு பி.எஸ்.சி. உயிரி தொழில்நுட்பத் துறை மாணவி வர்ஷினி தலைவராகவும், மூன்றாமாண்டு பி.காம். சி.ஏ. மாணவர் நிதேஷ் கிருஷ்ணா துணைத் தலைவராகவும், இரண்டாமாண்டு பி.எஸ்சி. சி.எஸ். சி.எஸ். துறை மாணவி பிரியதர்ஷினி செயலராகவும், இரண்டாமாண்டு பி.காம். பி.ஏ. மாணவர் கே.பி. குரு குகன் இணை செயலராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.