செவிலியர்கள்தான் மருத்துவமனையின் தேவதைகள்

டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம், தலைவர், கே.ஜி. மருத்துவமனை

சர்வதேச செவிலியர் தினம், செவிலியர்கள் குறித்து கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் கூறியதாவது,

‘மருத்துவமனையில் துப்புரவுத தொழிலாளர்கள், காவலர்கள், வண்டி தள்ளுபவர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கிளினிக்கல் மேனேஜர்கள், மருத்துவர்கள் என ஏராளமானவர்கள் பணிபுரிந்தாலும் செவிலியர்கள்தான் மருத்துவமனையின் தேவதைகள். செவிலியர்கள் இல்லை என்றால் எந்த ஒரு மருத்துவமனையும் இயங்காது.

இத்தாலியைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்தான் செவிலியர் பணியை முதன்முதலில் ஆரம்பித்தவர். போர்க்களத்தில் அடிபட்டவர்களுக்கு கட்டுப்போடுதல், உணவு அளித்தல் என ஆரம்பித்ததுதான் இந்த செவிலியர் பணி.

கே.ஜி. மருத்துவமனையில் கடந்த 50 வருடங்களில் பணிபுரிந்த செவிலியர்கள் அனைவரின் பெயர்களும் இன்னும் என் நினைவில் உள்ளது. 24 மணி நேரத்தில் நோயாளிகளை மருத்துவர்கள்  2 மணி நேரம்தான் சந்திப்பார்கள். ஆனால், செவிலியர்கள் 3 ஷிப்ட் என்ற கணக்கில் 24 மணி நேரமும் நோயாளிகளை அவர்களின் உடனிருந்து ஒரு குடும்பத்தினரைப்போல் பாதுகாக்கின்றனர்.

ஓட்டுநர், கொத்தனார், மீனவர் போன்ற வசதி வாய்ப்பு அதிகம் இல்லாத குடும்பத்தில் பிறந்து படித்து முன்னேறி வந்தவர்கள்தான், செவிலியர்கள். கே.ஜி. மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா சமயத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு செவிலியர்களும் போர்வீரர்களே. அவர்களின் பணியைப பார்த்து மா.சுப்பிரமணியம் தலைமையில் 100 செவிலியர்களுக்கு கொரோனா போர்வீரர்கள் என்ற விருதை வழங்கினோம்.

செவிலியர் பணிக்கு ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் வருகின்றனர். ஏனெனில், ஒரு குடும்பத்தில் அம்மாதான் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் நலமாகப பார்த்துக் கொள்கின்றார். அதுபோன்ற பெருந்தன்மையான மனது பெண்களுக்குத்தான் உள்ளது. அதனால்தான் இந்த செவிலியர் பணியில் பெண்கள் அதிகம் உள்ளனர்.

செவிலியர் பணி என்பது இஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து வருகின்ற பணி ஆகும். ஒரு மருத்துவர், பணி நேரத்தில் தூங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் செவிலியர்கள் பணி நேரத்தில் தூங்கியதாக சரித்திரம் இல்லை.

அப்படிப்பட்ட செயல்வீரர்களான செவிலியர்களைப பாராட்டவே சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர் வாரம் என அமைத்து வாரம் முழுவதும் செவிலியர்களைப் பாராட்டுவோம். கே.ஜி. மருத்துவமனையின் நற்பெயருக்கும் முன்னேற்றத்திற்கும் எங்கள் தாய்க்குலமான செவிலியர்கள்தான் காரணம்.

ஆசிரியர் பணிக்குப் படித்து, கல்கத்தாவில் இருந்த ஏழைகளின் உடல் நலனைக் காக்கும் பணியில் ஈடுபட்டு அவர்களுக்கு உணவு அளித்து பாதுகாத்தவர் மதர் தெரேசா. அவர் செவிலியர் பணியை செய்த ஒரு ஆசிரியர். அவரை இன்றுவரைப போற்றும்போது, செவிலியருக்கு பணிக்கெனவே படித்து செவிலியர் ஆனவர்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என யோசிக்க வேண்டும்.

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் 10 தினம் படுக்கையிலேயே இருந்தேன். அந்த நேரத்தில் என் அம்மாவைப போன்று செவிலியர்கள் என்னை கவனித்துக் கொண்டனர். செவிலியர்தான் நம்மைகே காப்பாற்ற வந்த அம்மா. மனைவியோ சகோதரியோ செய்யாத வேலைகளைக்கூட செவிலியர்கள் நோயாளிகளுக்காக செய்வார்கள். அவர்கள் மருத்துவர்களின் கோபத்தையும் பொறுத்துக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட செவிலியர்களை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

மருத்துவர் பணியும் செவிலியர் பணியும் கடவுளின் ஆணையாகவே கருதுகிறேன். மற்ற துறைகளில் பணிபுரிபவர்களின் குணநலன்கூட வித்தியாசப் படலாம்.  ஆனால் அதிகமான செவிலியர்கள், நல்ல மனம் படைத்தவராகத்தான் இருப்பார்கள்’ என்றார்.

பிறர் நலனே தன் நலம் எனக் கருதுபவர்கள் செவிலியர்கள்

செவிலியர் பணி மற்றும் சமூகத்திற்கு அவரது தேவை, செவிலியர் பணியில் தனது பயணம் குறித்து கே.ஜி. மருத்துவமனையின் செவிலியர் தலைமை நிர்வாக அதிகாரி டெல்பின் ஜேம்ஸ் கூறியதாவது,

‘கடவுளிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்றால் இந்தப் பணியை செய்ய முடியாது. செவிலியர்கள் செய்வது தொழிலல்ல, அது சேவை. இந்த வார்த்தையின் மூலமே இப்பணியின்  தனித்தன்மை நமக்குப் புரியும்.

பொதுவாக, ”தன்நலம் கருதாமல் பிறர் நலம் கருதி” என நாம் கூறுவோம். ஆனால் செவிலியர்கள் பிறர் நலன் தான் தன்நலம் எனக் கருதுபவர்கள். கொரோனா சமயத்தில் அனைவரும் சக மனிதரைத் தொடுவதற்கே அஞ்சினர். மிகப்பெரிய பணக்காரர் என்றாலும் அவருக்கு நோய்த்தொற்று இருந்தால், அவரின் குழந்தைகளும் மனைவியும் அவருடைய அறையின் வெளியில்தான் இருந்தனர். மேலும், அணிவதற்குக் கடினமாக இருந்தாலும் பி.பி.ஈ. என்ற கவச ஆடையைப் போட்டுக்கொண்டு நோயாளிகளின் நலனை தன்நலமாகக் கருதி செயல்பட்டவர்கள், செவிலியர்கள். இவ்வாறு கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய தங்களது சேவைகளால், செவிலியர்கள்தான் மருத்துவமனையின் முதுகெலும்பு என நிரூபித்தனர்.

எனக்கு திருச்சி மருத்துவமனையில் 15 வருட அனுபவமும் கே.ஜி. மருத்துவமனையில் 5 வருட அனுபவமும் உள்ளது. எனது அனுபவத்தில் கொரோனா காலத்தை மறக்க இயலாது. காலை 7 முதல் இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக வேலை இருந்து கொண்டேயிருந்தது. அப்போது ‘இவ்வளவுதான் கொரோனா, நம்மால் முடியும்’ என்று துணிந்து பணி செய்தேன்.

சிறுவயதில் என் தாத்தா ”நீ ஏன் செவிலியர் ஆகக் கூடாது” எனக் கேட்டதன் விளைவாக, 16 வயதில் செவிலியர் பணிக்குச் சேர்ந்தேன். மற்றவர்களுக்கு சேவை செய்வதில் வரும் திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை என அப்போதே உணர்ந்தேன். நோயாளிகள் ”இவர்தான் என்னை அன்போடு கவனித்துக்கொண்டார்” என சிரித்துக்கொண்டே சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷம், கோடி ரூபாய் கிடைத்தாலும் கிடைக்காது.

செவிலியர் பணி, 20 வருடத்திற்கு முன்பு இருந்ததுபோல் தற்போது சுலபமல்ல. ஏனெனில்,  நோயாளிகள் இணையதளத்தில் நோயைப் பற்றியும், சிகிச்சை முறை குறித்தும் நன்கு அறிந்துகொள்கின்றனர். இந்நிலையில், இதையெல்லாம் கவனத்தில்கொண்டு எதற்கும் தயார் நிலையில் நவீனமாக செவிலியர்கள் இருக்க வேண்டியுள்ளது.

மருத்துவத் துறையைப்போலவே செவிலியர் துறையிலும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக, செவிலியர்கள் ஒரே மாதிரிதான் கற்றுக்கொண்டு வருவார்கள். மருத்துவமனைக்கு வந்தபிறகு தொடக்க மதிப்பீட்டின் மூலமும், அவர்களின் ஆர்வத்தைப் பொருத்தும் அவர்களுக்கான பிரிவுகளுக்கேற்ப சிறப்புப் பயிற்சி அளிப்போம். அதன் பின்பு அவர்களுக்கு தனித்தனிப் பிரிவில் சான்றளிக்கப்படும்.

கே.ஜி. மருத்துவமனைத் தலைவர், எங்களை தேவதைகள் என்று அழைப்பார். அவர் கொடுக்கும்  உற்சாகத்தால்தான் எங்களால் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற முடிகிறது. அதனால்தான், 20 வருடத்திற்கு முன்பே, ரிநி யை ரிவீஸீரீபீஷீனீ ஷீயீ நிஷீபீ என்று ஒரு நோயாளி அழைத்தார். இங்கு சேவை செய்வதை கோயிலில் சேவை செய்வதைப்போல எண்ணுகிறோம். நோயாளிகளை உறவினராகக் கருதி தனிக் கவனம் செலுத்துவோம் என்பதைக் கொள்கையாக வைத்துள்ளோம். எங்கள் மருத்துவமனைக்கு என்.ஏ.பி.எச். சான்றிதழ் இருப்பதைப்போல, செவிலியருக்கு நர்சிங் எக்ஸலன்ஸ் என்ற தரச் சான்றிதழும் வாங்கியுள்ளோம்’ என்றார்.

நோயாளிகளின் பாதுகாப்பில் கவனம் குறைந்ததில்லை

கே.ஜி. மருத்துவமனை இருதய அறுவைசிகிச்சைப் பிரிவில் 23 ஆண்டுகள் நர்சிங் மேனேஜராகப பணியாற்றும் செவிலியர் முத்துக்குமாரி கூறியதாவது,

‘கார்டியோ அறுவைசிகிச்சை முடிந்துவரும் நோயாளிகளை சீராக கவனித்துக்கொள்வதே எங்களுடைய முக்கியமான பணியாகும். ஒரு நாளில் நான்கு முதல் ஆறு நோயாளிகள் என மாதத்திற்கு 50 முதல் 60 நோயாளிகளைப் பாதுகாப்போம்.

கே.ஜி. மருத்துவமனைக்கு கோயம்புத்தூரில் இருந்து மட்டுமின்றி பல மாவட்டங்களில் இருந்தும் பலதரப்பட்ட நோயாளிகள் வருகின்றனர். பணக்காரர், ஏழை என எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் வசதிகளைப்போல சிகிச்சை அளிக்கிறோம். மேலும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு எங்கள் ஜி.பி. ஐயா பெரிதும் உதவுகின்றார்.

இங்குள்ள அனைத்து செவிலியர்களும் நோயாளிகளைத் தன் குடும்பத்தாரைப்போல ஒரே மாதிரியாகக் கவனித்துக் கொள்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சக ஊழியர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து சகிப்புத்தன்மை மற்றும் அன்புடன் ஒவ்வொரு உயிரின் மதிப்பையும் கருத்தில்கொண்டு இரவு, பகல் பாராமல் தங்களது பணியை முழுமையாக செய்கிறோம்.

மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி எனப் பல்வேறு மொழி நோயாளிகளையும் கனிவுடன் கையாள்கிறோம்.  இதனால் நோயாளிகளின் பாதுகாப்பில் சிறிதும் கவனம் குறைந்ததில்லை.

பாதுகாப்பான, திருப்தியான சூழலில் செவிலியராகப் பணியாற்றுவதற்கு முக்கிய காரணமாகிய ஜி.பி. ஐயா மற்றும் மருத்துவர்களுக்கு எனது நன்றிகள்’ என்றார்.

செவிலியராகப் பணியாற்றுவதில் பெருமை

கே.ஜி. மருத்துவமனையில் கரோனரி கேரிங் யூனிட்டில் நர்சிங் மேனேஜராகப் பணியாற்றும் செவிலியர் கோமதி கூறியதாவது,

‘எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் புதிதாக பணிக்கு வரும் செவிலியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம். குறிப்பாக, நோயாளிகளிடம் எப்படி பேசுவது, அவர்களின் பய உணர்ச்சியை எவ்வாறு விலக்கி தைரியம் கொடுப்பது என்பது குறித்து கடந்த 40 வருடங்களாக எங்களது சேர்மன் ஜி.பி. ஐயா கற்றுக்கொடுத்துள்ளார்.

முன்பிருந்த காலங்களில் மாரடைப்பு வந்தால் ஆக்சிஜன் மற்றும் மார்ஃபிங் ஊசி அளித்து சிகிச்சையைத் தொடங்குவார்கள். ஆனால் தற்போது உயர் தொழில்நுட்பத்தின் நவீன கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சையைத் தொடங்குகின்றோம்.

அதாவது, கோல்டன்ஹவர் என்னும் மாரடைப்பு வந்த முதல் ஆறு மணி நேரத்தில் நோயாளிகளுக்கு லோடிங் டோஸ் அளித்து உடனடியாக கேத்லேப் எடுத்துச் சென்று அடைப்பு உள்ளதா என்று கண்டறிந்தவுடன் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்து சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

மேலும் முதல்நாள் ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் சர்ஜரி செய்தவுடன், இரண்டாவது நாள் மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து மூன்றாவது நாள் எவ்வித உயிர் சேதமின்றி டிஸ்சார்ஜ் செய்வதால் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

உலகில் தாயின் அன்புதான் உயர்ந்தது என்பார்கள். அதேபோல நீங்களும் எங்களைத் தாயிற்கு ஈடாகக் கவனித்துக்கொள்கின்றீர்கள் என்று நோயாளிகள் கூறுகையில் செவிலியர்களாகிய எங்களுக்கு பெரும் ஆனந்தம் கிடைக்கின்றது. இதனால் மற்ற வேலைகளைவிட செவிலியராகப் பணியாற்றுவதில் மிகவும் பெருமை அடைகின்றேன்’ என்றார்.

ஏழைகளின் கடவுள் ஜி.பக்தவத்சலம் ஐயா

கடந்த 40 வருடங்களாக கே.ஜி. மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் செவிலியர் மேலாளர் நிர்மலா தனது மருத்துவப் பணி குறித்து கூறியதாவது,

‘இங்கு பணிக்கு சேரும்போது எனக்கு 17 வயது. எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் எனக் கூறி பணியில் சேர்ந்தேன். முதல் ஒரு வருடம் உதவி செவிலியராக பணிபுரிந்தேன். பிறகு, கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்களுக்கான டிப்ளமோ படித்து முடித்தேன்.

இயலாதவர்களுக்கு உதவுவதுதான் செவிலியர்களின் பணி. அதை நாங்கள் மிகவும் ஆர்வமாக செய்கிறோம். ஒருவரின் கழிவுகளைத் துடைப்பது முதல் அவசர சிகிச்சை வரை அனைத்தையும் இரவு, பகலாக செய்கிறோம். அதற்கான அடிப்படைப் பயிற்சி முதல் அனைத்துப் பயிற்சிகளும் கே.ஜி. மருத்துவமனையில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் செவிலியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

நான் பணிபுரியும் பிரிவில் அனைத்து விதமான நோயாளிகளும் அனுமதிக்கப்படுவார்கள். திடீரென நோயாளிகளின் உடல்நிலை மோசமாக மாறிவிடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் விரைவாக செயல்பட்டு மருத்துவர்களுக்கு தகவல் அளித்து உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்வோம். எந்த மாதிரியான நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என அனைத்தும் இங்கு கற்பிக்கப்படுகிறது.

‘கோவை மாநகரின் மாமனிதர்’ எங்கள் கே.ஜி. மருத்துவமனையின் சேர்மன் அவர்கள். அவரால்தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் காட்டிய வழியில் சென்றதால்தான் இந்த அளவிற்கு நாங்கள் முன்னேறி வந்துள்ளோம். அவர் மிகவும் எளிமையானவர். சாதாரண பிளாஸ்டர் ஒட்டுவது முதல் ஐ.சி.யூ. நோயாளிகளுக்கான சிகிச்சை வரை அனைத்தையும் கண்காணித்து எங்களிடம் கேட்டு தெரிந்து வைத்திருப்பார். அவர் எங்களுக்கு கற்றுத்தந்த பாடத்தை வைத்துத்தான் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். அதையே எங்களுக்கு அடுத்து வரும் செவிலியர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.

எனது மகளின் பிரசவத்தின்போது சிக்கலான நிலை ஏற்பட்டது. அப்போது, எங்கள் மருத்துவமனை மருத்துவர் சந்திரகலா மற்றும் சேர்மன் ஆகியோர் நேரடியாக கண்காணித்து எனது மகளையும் குழந்தையையும் காப்பாற்றினர். மருத்துவமனையில் நான்கு மாதங்கள் எனது மகள் பெற்ற சிகிச்சைக்கு, சுமார் மூன்றரை லட்சம் வரை கட்டணம் வந்தது. சிகிச்சை முடிந்து கிளம்பும்போது, ’உங்களால் எவ்வளவு பணம் கட்ட முடியுமா அதை மட்டும் கட்டுங்கள்’ எனக் கூறினார். இந்த வார்த்தைகளைக் கூற பெரிய மனது வேண்டும். அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர், ஏழைகளின் கடவுள்’ என்றார்.

செவிலியர்கள் பணி புனிதமானது

கே.ஜி. மருத்துவமனையின் செவிலியர் மேலாளர் சந்திரா தனது பணி அனுபவம் குறித்து கூறியதாவது,

‘என் அப்பாவும் கே.ஜி. மருத்துவமனையின் தலைவரும் நண்பர்கள் என்பதால், நான் எனது பள்ளிப் படிப்பை முடித்ததுமே இங்கேயே பயிற்சி பெற்று செவிலியராக கடந்த 29 வருடமாக பணிபுரிகின்றேன்.

எனக்கு செவிலியர் பணியில் அதீத ஆர்வம் இருந்தது. ஆரம்பகாலக் கட்டத்தில் மூத்த செவிலியர்கள் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தனர். ஒரு அப்பா தன் குழந்தைக்குக் கற்பிப்பதுபோல, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். மருத்துவர் பணியில் இல்லை என்றாலும் எங்களால் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற அளவிற்கு எங்களுக்குப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் இரவு மணி 2, 3 போன்ற நேரங்களில் நோயாளிகள் வரும்போது அவர்களுக்கு என்ன பிரச்னை, என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவார் ஜி.பி. ஐயா. அதுவே எங்களுக்கு இப்போது நல்ல அனுபவமாகப பழகிவிட்டது.

கொரோனா காலகட்டத்தில் பணி செய்ய எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். அதையெல்லாம் எதிர்த்துத்தான் பணிபுரிந்தோம். நோயாளிகள் அருகில் குடும்பத்தினரே வராதபோதும், அவர்களுக்குத் தேவையான அனைத்துமே செவிலியர்கள் நாங்கள் செய்தோம். அந்த காலகட்டத்தில் பணிபுரிந்தது மிகவும் கடினமாக இருந்தது. இதனால் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயமும் இருந்தது. ஆனாலும் எனக்கு தொற்று ஏற்படவில்லை. செவிலியர் இருக்கும் குடும்பத்தில் நோய் ஏற்படாமல் கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதை நிரூபிக்கும்படியாகத்தான் என் அனுபவங்களும் இருந்தன. ஒரு செவிலியராக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் எங்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்துகொள்வார். தவறுகள் செய்தாலும் தண்டனை தராமல் மன்னித்து ஏற்றுக்கொள்வார். அவரால்தான் நான் தற்போது செவிலியர் மேலாளராக உள்ளேன்’ என்றார்.

கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்கள் தினமும் படிக்கனும்..!

செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்பாக கே.ஜி. மருத்துவமனை செவிலியர் பயிற்சியாளர் விஜயராணி கூறியதாவது,

‘செவிலியர்கள் தற்போதைய சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகளைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தினமும் இங்குள்ள அனைத்து செவிலியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

தினசரி 12 முதல் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் வகுப்புகளில் செவிலியர்கள் கலந்துகொள்ள முடியாமல் போனால் அவர்களுக்கென மாலை நேரத்தில் வகுப்பு எடுக்கப்படும்.

நர்சிங் படிப்பு முடித்து இங்குவரும் செவிலியர்கள் தங்கள் படிப்பை முடித்து நீண்டகாலம் ஆகிஇருக்கும் வேளையில், தற்போது நவீனமயமாகி வரும் சிகிச்சை முறைகளைக் குறித்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், தற்கால நடைமுறைக்கேற்ப அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தினமும் பயிற்சி வழங்கப்படுகிறது.

கே.ஜி. மருத்துவமனையில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் உள்ளன. அதேபோல் நர்சிங் பணிக்காக புதிய இயந்திரங்கள் வரும்போது அதனை உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. மேலும், நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும், செவிலியர்களின் தனிப்பட்ட பிரச்னைகளை கையாளவும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது’ என்றார்.

நோயாளிகள் மீது முழு அக்கறை காட்டுவதுதான் எங்கள் சிறப்பு

கே.ஜி. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேலாளர் சாந்தகுமாரி கூறியதாவது,

‘ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிக்கு மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். குறிப்பாக, பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளைப் பல்வேறு துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினர் முதலுதவி வழங்குவதில் தொடங்கி, அவரை முறையாகக் கண்காணித்து சிகிச்சை வழங்குவார்கள்.

விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வருவோரின் உறவினர்கள் பதற்ற நிலையில் இருப்பார்கள். அவர்களிடம் காயமடைந்தவரின் அப்போதைய நிலை குறித்து தெரிவித்து அவர்களை ஆசுவாசப்படுத்துவோம். மருத்துவப் பணியாளர்கள், நோயாளி மற்றும் அவரின் உறவினர்களிடம் எப்படி நடந்துகொள்ளவது என்பது குறித்து குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதுபோல கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

நோயாளிகளிடம் முகம் சுழிக்காமல் எங்கள் வீட்டு நபர்கள்போல இங்குள்ள செவிலியர் குழுவினர் மற்றும் மருத்துவர்கள் கவனிக்கிறோம். இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பல்வேறு மருத்துவ முறைகளையும் கற்றுக்கொடுத்து அனைவரும் ஒரே குழுவாக செயல்படுகின்றனர். நோயாளிகள் மீது முழு அக்கறை காட்டுவதுதான் எங்கள் மருத்துவமனையின் சிறப்பு. ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர் முதலில் அணுகுவதும், நம்புவதும் செவிலியர்களைத்தான். அந்தப் பொறுப்புணர்வோடு எங்கள் செவிலியர் குழு செயல்படுகிறது.

மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள் தேவை என்று தெரிவித்தால் உடனடியாக தரமான உபகரணத்தை எங்கள் நிர்வாகம் வழங்கிவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் எந்தவித முரணும் இருக்கக்கூடாது எனும் நோக்கத்துடன் மருத்துவமனை நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

செவிலியர்களின் தனிப்பட்ட பிரச்னை காரணமாக, நோயாளிகளை கவனிப்பதில் எந்தவித சிக்கல்களும் எழுந்துவிடக்கூடாது என்பதால் இங்கு பிரத்யேகமாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு திறமை வாய்ந்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். இதனால்,  நோயாளியின் ’கோல்டன் ஹவர்ஸ்’ வீணடிக்கப்படாமல் அவருக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

மருத்துவத்துறையில் முக்கியமானவர்கள் செவிலியர்கள்

அறுவை சிகிச்சைப் பிரிவு பொது மேலாளர் பிரகாஷ் கூறியதாவது, ‘செவிலியர்கள் இல்லையென்றால் ஒரு மருத்துவமனை முழுமை அடையாது. இங்கு 40க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அறுவை சிகிச்சைப் பிரிவு என்பது ஒரு கோவிலின் கர்ப்ப கிரகம் போன்றது. அங்கே எல்லோராலும் செல்ல முடியாது. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே போக முடியும். அங்கே செல்வதற்கான தகுதியும் திறமையும் உடையவர்கள் செவிலியர்கள்.

ஒரு நாட்டிற்கு எப்படி இராணுவம் முக்கியமோ, அதேபோல மருத்துவமனையில் செவிலியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இராணுவத்தினர் எப்படி நாம் தூங்கியபோதும், அவர்கள் விழித்திருந்து இந்நாட்டைப் பாதுகாக்கிறார்களோ, அதேபோல செவிலியர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நோயாளிகளைப் பாதுகாப்பவர்கள்.

செவிலியர்கள் இயங்கினால்தான் மருத்துவர்கள் ஓய்வெடுக்க முடியும். நோயாளிகளின் உறவினர்கள் மற்ற வேலைகளை செய்ய முடியும். செவிலியர்கள் இல்லையென்றால் மருத்துவத் துறையே இயங்க முடியாது.

அந்த வகையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் இருக்கும் செவிலியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். மருத்துவரின் சிந்தனையைப் புரிந்துகொண்டு அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்வதற்கு முக்கியப் பங்கு வகிப்பவர்கள்.

தண்ணீர் அருந்தாமல், உணவு உண்ணாமல் தொடர்ந்து 10 முதல் 12 மணி நேரம் வரை நின்று கொண்டு செவிலியர்கள் உதவுவார்கள். வீட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், தங்களது உடலில் ஆயிரம் பாதிப்புகள் இருந்தாலும் எதனையும் கருதாமல் திடமாக இருந்து, பொறுமை, சகிப்புத்தன்மை, தைரியத்தோடு பணிபுரிவார்கள். அறுவை சிகிச்சையின் போது எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மருத்துவரோடு உறுதுணையாக இருப்பார்கள். நோயாளிகள், மருத்துவர்கள், பிற தொழில்நுட்ப நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடிய தனித்துவமான பணி செவிலியர்களுக்கு உள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கையும் ஒருவர் பல்வேறு இடங்களில் சந்தித்து இருக்கலாம். இந்த நான்கு பேரும் ஒரே உருவமாக இருப்பவர்கள் செவிலியர்கள்தான். அதை ஒருவர் நோய்வாய்ப்படும்போதுதான் உணர முடியும். ஒரு நண்பராகவும் இருந்து நோயை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள். எனவே, செவிலியர்களுக்கு நமது சமூகத்தில் உரிய மதிப்பும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்’  என்றார்.

தரமான சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம்

கடந்த 28 வருடங்களாக இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் பல்வேறு இடங்களில் பணியாற்றியும், தற்போது கே.ஜி. மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் ராஜேஸ்வரி கூறியதாவது,

‘நான் பார்த்தவரை கே.ஜி. மருத்துவமனையில் இருப்பதுபோன்ற தரமான இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு வேறு எங்கும் இல்லை. எங்களது சேர்மன் அவர்கள் எந்த விதத்திலும் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டார். கே.ஜி. மருத்துவமனையைப் பொருத்தவரை தரமான சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எங்களது இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில், தினமும் மூன்று அல்லது நான்கு அறுவை சிகிச்சைகள் செய்கிறோம். ஆரம்ப கட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்திற்கும் இப்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. உலக அளவில் தற்போது ஏராளமான நவீனத் தொழில்நுட்ப அறுவை சிகிச்சைக் கருவிகள் வந்துவிட்டன. அவை அனைத்தும் எங்கள் கே.ஜி. மருத்துவமனையில் உள்ளது சிறப்பு.

செவிலியராக இருந்தாலும், அவர்கள் ஒரு மருத்துவரைப்போல எங்களுக்கு அனைத்தையும் கற்பித்து வழி நடத்துகின்றனர். ஆரம்ப காலத்தில் செவிலியர் பணியில் இணைந்தபோது சிறிது பயம் இருந்தது. நாளடைவில் அந்த பயம் விலகிவிட்டது. மேலும், பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் நம்மை ஊக்குவித்து வழிநடத்தும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் நமது கே.ஜி. மருத்துவமனையில்தான், Minimal Invasive Cardiac Surgery எனும் அறுவை சிகிச்சை முறை குறித்து கற்றுக்கொண்டேன். தமிழ்நாட்டில் இங்குதான் அதிகமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது’ என்றார்.