2024 மக்களவை தேர்தல்….. பயம் வந்துவிட்டதா மோடிக்கு?

பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி எனத் திரண்டு நிற்கும் எதிர்க்கட்சிகளால் பிரதமர் மோடியை வீழ்த்த முடியுமா, இந்தியா கூட்டணியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நேரு, இந்திராகாந்திக்கு பிறகு இருமுறை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் மோடியை, மீண்டும் மூன்றாவது முறை வெற்றி பெற செய்யக்கூடாது, எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா கூட்டணி என்ற உருவத்தில் ஒரே அணிக்கு வருவதற்கு உறுதியேற்றுள்ளன எதிர்க்கட்சிகள்.

என்டிஏ கூட்டணிக்கு பாஜக தான் தலைமை என்ற நிலையில், இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸால் தலைமை வகிக்க முடியவில்லை. பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் முயற்சியால் பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் 2வது முறையாக காங்கிரஸ் ஒருங்கிணைப்பில் பெங்களூருவில் கூடி கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து 11 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படும் என்றும், அதற்கு ஒருங்கிணைப்பாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்தியா கூட்டணி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா கூட்டணி என்ற பெயரில் நாடு முழுவதும் முகவரி தெரிந்த மாநிலக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், பாஜகவும் என்டிஏ கூட்டணியை விரிவுப்படுத்தி தாங்களும் வலுவாக இருப்பதாகக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் சில சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், என்டிஏ கூட்டணியில் லெட்டர் பேடு கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதிக எண்ணிக்கையான கட்சிகள் (38 கட்சிகள்) இருப்பதுபோன்ற தோற்றத்தைக் காட்டியுள்ளது பாஜக.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இருந்த நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே போன்றவர்கள் இப்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். மேலும், அரவிந்த் கேஜரிவால், மம்தா பானர்ஜி போன்றவர்கள் இந்தக் கூட்டணிக்கு வந்திருப்பதும் கூடுதல் பலம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமுறை பிகாரில் 40 தொகுதிகளில் 39 இல் வெற்றி பெற்ற பிகார், 48 இல் 41 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற மகராஷ்டிரம் ஆகியவற்றில் பாஜகவின் பலம் இந்த முறை குறைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மகராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் ஆகியோர் ஆதரவாகத் திரும்பியிருப்பது பாஜகவுக்கு வாக்கு பலம் சற்றுக் கூடியிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆனால், ‘ஊழலுக்கு எதிரான தலைவர் மோடி, ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக’ எனும் பிரசாரத்தை முன்னிறுத்தும் பாஜக, ஊழல் கரை படிந்த இருவரையும் தங்கள் கட்சியில் சேர்த்திருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது, இதை மக்கள் எப்படி பார்க்கப் போகின்றனர் என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோரால் மராத்தா வாக்குகளைக் கொண்டுவர முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால்,  மகராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவரான சரத் பவாரை மீறி மராத்தா வாக்குகளை, இவர்களால் திருப்ப முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதேபோல,  பிகாரில் நிதிஷ்குமார், தேஜஸ்வி, காங்கிரஸ் கூட்டணி வலுவான வாக்கு வங்கியுடன் இருக்கும் நிலையில், அதை மீறி கூடுதல் வாக்கு வங்கியைப் பெறுவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் மாஞ்சி, முன்னாள் முதல்வர் உபேந்திர குஸ்வாகா,  முன்னாள் மத்திய அமைச்சர் மகன் சிராக் பஸ்வான், அவரது சித்தப்பா பசுபதி பராஸ் ஆகியோரை மீண்டும் என்டிஏ அணிக்குள் கொண்டுவந்தது போன்றவை பிகாரில் பாஜக கூட்டணிக்கு வாக்கு பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனால், இறுதி யுத்தத்தில் வெற்றி பெறப் போவது யார் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் ஆளும் கட்சி, காங்கிரஸ் பிரதான எதிர்கட்சி என்பதால் இந்தியா கூட்டணி அங்கு அமைய வாய்ப்பில்லை. அதேபோல, மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என மார்க்சிஸ்ட் தேசியப் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி கூறியிருப்பதால் அங்கும் இந்தியா கூட்டணி அமையுமா என்பது கேள்விக்குறிதான்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி, எதிர்க்கட்சி காங்கிரஸ் என்பதால் அங்கும் இந்தியா கூட்டணி அமையுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அங்கு ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஓ.பி.சோனியை,  பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு கைது செய்திருப்பது இந்தியா கூட்டணிக்கு வேட்டுவைப்பதுபோல அமைந்துள்ளது.

இதையும் தாண்டி ஆம் ஆத்மி அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாலும்,  தில்லி மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருப்பதாலும் இந்தக் கூட்டணிக்கு ஆம் ஆத்மி வந்துள்ளது. குஜராத், தில்லியில் வேண்டுமானாலும் இந்தியா கூட்டணி அமையலாம்.

எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பதால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்பது மாயத்தோற்றமே. மத்தியப்பிரதேசம், சத்திஷ்கர், ராஜஸ்தான், ஹிமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம்  உள்ளிட்ட மாநிலங்களில் 185 தொகுதிகளில் பாஜக – காங்கிரஸ்  இடையே நேரடிப் போட்டி நடக்கிறது. இதில் பாஜக 85 சதவீத தொகுதிகளில் வெற்றிபெறுவதால்தான் பாஜக ஆட்சிக்கு வருகிறது என்பதுதான் உண்மை. இந்தத் தொகுதிகளில் பாஜகவை, காங்கிரஸ் வீழ்த்தாமல் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சி என்பது குதிரைக்கொம்புதான்.

தென்மாநிலங்களில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் என்டிஏ அணிக்கு பெரிய வெற்றி கிடைக்கப் போவதில்லை. கர்நாடகத்தில் தேவகௌடாவின் ஜேடிஎஸ் கட்சி பாஜவுடன் அணி சேர்வதால் மீண்டும் அதிக எண்ணிக்கைத் தொகுதிகளைக் கைப்பற்றலாம் என பாஜக கணக்கு போடுகிறது. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் வலுவான ஆட்சி அமைந்திருப்பதன் மூலம் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா கூட்டணி உருவாகியிருப்பது பாஜகவுக்கு லேசான குடைச்சலைக் கொடுத்திருப்பது என்பது உண்மைதான். என்டிஏ கூட்டணியையும் மீறி மோடி தான் பிரதான பிம்பம் என்ற தோற்றம் இருந்த நிலையில் மீண்டும் என்டிஏ அணியை விரிவாக்கித் தாங்களும் கூட்டணி பலத்துடன் இருக்கிறோம் என்பதை பாஜக காட்டியுள்ளதன் மூலம் மோடி பிம்பத்தைவிட என்டிஏ கூட்டணியைத்தான் பாஜக நம்புகிறதோ என்ற தோற்றமும் உருவாகியுள்ளது.

இந்தியா கூட்டணி உருவாகியிருந்தாலும் இந்த கூட்டணி கடைசி வரை கரை சேர்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்தக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் யார், கடைசிவரை அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் தக்க வைக்க முடியுமா என்பது இந்தக் கூட்டணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்.

‘என்டிஏவை வெல்லுமா இந்தியா?!’ என்பதை காலம்தான் கணிக்கும். நவம்பரில் நடைபெறும் மத்தியப்பிரதேசம், தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்கள் இந்தியா கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடும் என்பதுதான்  பெரும்பாலான அரசியல்நோக்கர்களின் கருத்து.

என்டிவில் முக்கியத்துவம் பெற்ற எடப்பாடி!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு கூட்டணி அமையுமா, பாஜக தனித்து களம் இறங்குமா, திமுக கூட்டணி கட்சிகள் சில வெளியேறி அதிமுகவுடன் சேருமா என்ற கேள்விகளுக்கு தில்லியில் நடந்த என்டிஏ கூட்டம் முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அலட்சியம் செய்யப்படுகிறார் என்ற தோற்றம் உருவானது. ஒருவேளை ஓபிஎஸ் உடன் பாஜக கூட்டணி அமைத்து எடப்பாடியைத் தனித்துவிடக்கூடும் என்ற தகவலும் வெளியானது. அண்ணாமலையின் அரசியல் நகர்வுகளும் அதுபோலதான் இருந்தன.

ஆனால், இந்தியா கூட்டணி கொடுத்த அரசியல் அழுத்தம், என்டிஏ கூட்டணிக்குள் அதிமுகவைக் கொண்டுவர பாஜகவுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டது. அத்துடன், தில்லி என்டிஏ மோடிக்கு வலது பக்கத்தில் நிற்க வைக்கப்பட்டது, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஹோட்டலுக்கு வெளியே வந்து வரவேற்றது போன்ற பிரதான முக்கியத்துவம் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், லெட்டர் பேடு கட்சிகளை எல்லாம் தில்லிக்கு அழைத்த பாஜக, தன்னை நம்பி கடைசி வரை காத்திருந்த, இப்போதும் இருக்கும் ஓபிஎஸ்ஸை கைவிட்டது எடப்பாடிக்கு கூடுதல் உற்சாகம். ஆனால், என்டிஏ கூட்டத்துக்கு மறுநாள் தில்லியில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அழைத்தது ஓபிஎஸ்க்கு ஓரளவு ஆறுதல். இது எடப்பாடிக்கு கொஞ்சம் நெருடல்தான்.

அதேபோல, வாக்கு பலமே இல்லாத கட்சிகளை எல்லாம் தில்லிக்கு அழைத்த பாஜக, 0.5 சதவீத வாக்குபலம் கொண்ட தேமுதிகவை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்விக்கு தமிழக பாஜகவினர்தான் பதில் சொல்ல வேண்டும்.