2024 மக்களவைத் தேர்தல்: கோவையில் களம் காணப்போவது யார்?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க வி.ஐ.பி.கள் தயாராகி வருவதால் கோவை ஸ்டார் தொகுதியாக மாறக் காத்திருக்கிறது.

இத்தேர்தலில் எப்படியும் புதுவை உள்பட 40க்கு 40 தொகுதிகளையும் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த முறை கோட்டை விட்டதுபோல இந்த முறை இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் குறைந்தபட்சம் தங்களுக்கு பலமான கொங்கு மண்டலத்திலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் அதிமுகவும் கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளது.

அதே கொங்கு மண்டலத்தில் தங்களுக்கும் வலுவான ஆதரவு இருப்பதாகக் கருதுவதால் கொங்கு மண்டலத்தில் இருந்து  இந்த முறை வெற்றிக்கணக்கைத் தொடங்கிவிட வேண்டும் என்று காய்நகர்த்தி வருகிறது பாஜக, திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளுமே அதிகம் குறிவைக்கும் தொகுதி கோவை மக்களவைத் தொகுதிதான்.

கோயமுத்தூர் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக அசுர வளர்ச்சி அடைந்துவரும் ஒரு மாநகரமாகும், கோயமுத்தூர். இதுமட்டுமல்லாமல் தொழில் வளத்தில் முன்னணியில் திகழ்கிறது. இதனிடையே தற்போதைய எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியைச் சேர்ந்த நடராஜன் இதுவரை 2 முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய பரிச்சயம் ஏற்படவில்லை.

குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பியான சு.வெங்கடேசனிடம் உள்ள சுறுசுறுப்பில் கால்வாசிகூட இவரிடம் இல்லை. காரணம், அவரது வயது. இதனால்தான் கோவையில் நேரடியாக களமிறங்கும் திட்டத்தில் உள்ள திமுக அதற்கான பூர்வாங்கப் பணிகளை கவனித்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால்,  அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால் மாலுமி இல்லாத கப்பல்போல இப்போது கோவை மாவட்ட திமுக பயணிக்கிறது. எல்லா பிரச்னைகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிச்சயம் வருவார், வெற்றிக்கனியைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையில் உடன்பிறப்புகள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் மக்களவைத் தேர்தலில் கோவைக்குப் பதில் வேறொரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. திமுக இளைஞரணிச் செயலரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது திமுகவை வெற்றிபெற வைத்தால் மாதாமாதம் கோயமுத்தூருக்கு வருவேன் எனக் கூறியிருந்தார். அடிக்கடி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவைக்கு விசிட் அடித்து வருகிறார். இதை வைத்து பார்க்கும்போது கோயமுத்தூரில் திமுக களம் இறங்கப்போவது உறுதி என்பது தெளிவாகியுள்ளது.

திமுக வேட்பாளர் யார்?

கோயமுத்தூரைப் பொருத்தவரை தெற்கு மாவட்டச் செயலர் நா.கார்த்திக்,  ம.நீ.ம.வில் இருந்து திமுகவுக்கு தாவிய சி.மகேந்திரன் ஆகியோரில் ஒருவருக்குத்தான் இங்கு போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கார்த்திக்கைப் பொருத்தவரை பலத்த அனுபவசாலி. துணை மேயர், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. என முத்திரை பதித்தவர். எதிர்கட்சியோ, ஆளும்கட்சியோ கட்சிப் பணியை தொய்வின்றி சுறுசுறுப்பாக செய்யக் கூடியவர் எனத் திமுக தொண்டர்களிடம் நற்பெயரைப் பெற்றவர். துணை மேயர்,  எம்.எல்.ஏ. பொறுப்புகளில் இருந்தபோது மக்களுடன் இறங்கிப் பணியாற்றியதால் பொதுமக்களாலும் நன்கு அறிமுகமானவர். எனவே, இவரே திமுக வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இவரைப் பொருத்தவரை மாநில அரசியலில்தான் அதிக ஆர்வம். இன்னும் மூன்று ஆண்டுகள் பதவி இல்லாமல் இருப்பதைவிட இந்த முறை எம்.பி. ஆவது நல்லது என கார்த்திக்கைச் சுற்றியுள்ள அவரது ஆதரவாளர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். முதல்வரின் நேரடித் தொடர்பில் இருக்கும் இவர் இத்தொகுதி வேட்பாளாக மாறுவது உறுதி என்கின்றனர் இவரது ஆதரவாளர்கள்.

அதேபோல, கோயமுத்தூரில் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 1.45 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.  இதன்மூலம் இந்தத் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமாகியுள்ளார். அவரைக் களம் இறக்கினால்,  அதிமுகவுக்கு விழும் வாக்குகளையும் கவர்ந்து இழுத்து திமுகவால் வெற்றி பெற முடியும் என்ற அரசியல் கணக்கும் திமுகவிடம் உள்ளது.

களம் இறங்குகிறாரா கமல்?!

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேர ஆர்வமாகக் காத்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான ம.நீ.ம. இத்தொகுதியில் களம் இறங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் களம் இறங்கி, சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது கமலின் மனதில் ஆறா வடுவாக இப்போதும் இருப்பதாக ம.நீ.ம. நிர்வாகிகள் கூறுகின்றனர்.

எனவே, இந்த முறை இதே தொகுதியில் களம் இறங்கி எப்படியும் வெற்றி பெற்று தனது ஆறாத வடுவுக்கு மருந்து தடவிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கமல் திட்டம் தீட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதன் முதல்படியாகத்தான் கோயமுத்தூரின் பெண் ஓட்டுநரான இளம் பெண் சர்மிளா திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர் தனியாக வாடகைக் கார் ஓட்டி  வருவாய் ஈட்டும் வகையில் கார் பரிசு வழங்கியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை போட்டி?!

கோயமுத்தூர் தொகுதியில் பா.ஜ.க. ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்றிருப்பதால் இந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட பாஜகவும் முயற்சி செய்து வருகிறது. ஆனால்,  அதிமுக தலைமையை அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாலும், பாஜக தலைமையில் தனி அணி உருவாக்கிப் போட்டியிட விரும்புவதாலும் அண்ணாமலை களம் இறங்கினால் அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக களப் பணியாற்ற வாய்ப்புள்ளது. எனவே, அண்ணாமலை களம் இறங்குவாரா என்பது கேள்விக்குறிதான்.

இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துகொண்டததால்தான் மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை போட்டியிடாதபட்சத்தில் பாஜகவின் மாவட்டத் தலைவரான பாலாஜி உத்தமராமசாமி களம் இறக்கப்படக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே கோயமுத்தூரில் பல்வேறு அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.  ஆயிரக்கணக்கில் தொண்டர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது, சுதந்திர தினத்தின்போது 1 லட்சம் தேசியக் கொடியை விநியோகம் செய்தது என கட்சி மேலிடம், மக்கள் கவனம் ஆகியவற்றை ஈர்க்கும் வகையில் அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். இவரை களம் இறக்கினால் திமுக மீது இருக்கும் அதிருப்தி வாக்குகள், தங்களுக்கு ஆதரவான பிறமொழியாளர் வாக்குகள், ஹிந்துத்வ வாக்குகள் ஆகியவற்றுடன் எளிதில் வெற்றி பெறலாம் எனக் கணக்கு போட்டு வருகிறது பாஜக.

பாஜக – அதிமுக கூட்டணி இல்லையென்றால் இத்தொகுதியில் அதிமுக சார்பில் வடவள்ளி சந்திரசேகர் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் இரத்தத்தின் இரத்தங்கள். முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் தலைமை நிலையச் செயலருமான எஸ்.பி.வேலுமணியின் இதயக்கனியாகத் திகழும் சந்திரசேகரை இந்த முறை எப்படியாவது எம்.பி.யாக்கிவிட வேண்டும் என்ற ஆசையில் இரத்தத்தின் இரத்தங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் போட்டியிடுமா?!

கோயமுத்தூரில் 2009 இல் திமுக கூட்டணியிலும்,  2014 இல் தனித்தும் போட்டியிட்ட காங்கிரஸ் இத்தொகுதியில் தோல்விதான் அடைந்துள்ளது. இருப்பினும் இத்தொகுதியில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலர் மயூரா ஜெயக்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஸ்ரீநிதி வி.பிரேம் உள்ளிட்டோரும் முயற்சியில் உள்ளனர். ஆனால், கோயமுத்தூர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான அரசியல் நகர்வுகளை இப்போதே நட்சத்திரத் தலைவர்களும், உள்ளூர் முக்கியப் பிரமுகர்களும் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர். கொங்கு மண்டலத் தலைநகரில் போட்டியிடும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது ஜனவரிக்கு மேல்தான்  ஓரளவு தெரியும்.

பெட்டி செய்தி

அதிமுக – பாஜக கூட்டணி உடைந்து பாஜக தலைமையில் ஒரு அணியைக் கட்டமைத்தால் கோயமுத்தூரில் அண்ணாமலை போட்டியிடும் வாய்ப்புள்ளது, அண்ணா திமுகவுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் நிச்சயம் அண்ணாமலை போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை. பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் கோயமுத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் போட்டியிதுவதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வாய்ப்புள்ளது. காரணம், இவர் தேசிய மகளிர் அணித் தலைவியாகவும் இருப்பதால், எம்.பி. ஆனால் மத்திய அமைச்சராகலாம் எனும் கணக்கில் இருக்கவும் வாய்ப்புள்ளது.