அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு, தங்களுடைய உண்மைத் தொண்டன் எழுதிக்கொள்வது,

முதலில் உங்களை திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பார்ப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. எவ்வளவு  பொறுமை! எவ்வளவு உழைப்பு! அதற்குப் பிறகுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். போன வாரம் கட்சி தொடங்கி இந்த வாரம் ஆட்சிக்கு வரத் துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் ஒரு பாடம். அவர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞர் இறந்தபொது கல்லறை இடத்துக்குக்கூட போராட வேண்டிய நிலையில் சட்டப் போராட்டம் நடத்தி வென்றீர்கள். அதைப்போலவே அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என்று பிரிந்திருந்தபோதும் குறுக்கு வழியை கையாளாமல் ஜனநாயக முறைப்படி தேர்தலில் மோதி மக்களிடம் உங்களுக்கு உள்ள ஆதரவை நிரூபித்தீர்கள்.

நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றபோது தமிழ்நாட்டில் இரண்டு பெரிய சிக்கல்கள். ஒன்று, காலியான கஜானா; இரண்டாவது, கொரோனா எனும் பெருந்தொற்று. இரண்டையும் மிகத் திறமையாக சமாளித்தீர்கள். அதையெல்லாம் கண்டு என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு இன்று ஆட்சி நடக்கிறதே தவிர நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

உங்கள் மீது  பெரிய புகார் எதுவும் இல்லை. ஆனால் அதேபோல மக்களின் பல குறைகளும் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. மத்தியில் உள்ள ஆளும் கட்சி, ஆளுநர் மூலம் கொடுக்கும் தொல்லைகளைத் திறமையாக சமாளிக்கிறீர்கள். ஆனால் பல இடங்களில் மக்கள் நலப் பணிகள் பல, செய்யப்படாமல் அப்படியே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளும் காணப்பட வேண்டும் என்பதே மக்களுக்கும் என் போன்றவர்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு.

அரசாங்கம் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் தேக்கமும், அதிருப்தியும் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. தலைநகரம் சென்னையைச் சுற்றி பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவை தொடர்ந்து செய்திகளிலும் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாடே வளர்வதுபோல ஒரு தோற்றமும் இருக்கிறது. திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பல தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் தத்தளித்த சென்னை இன்று பல மழை நீர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த சிக்கல் தீர்ந்து இருக்கிறது. பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் திட்டம் வந்திருக்கிறது.

எல்லாம் சரி… ஆனால், தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்று தயவு செய்து நீங்கள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, எங்கள் கோவை பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் போதாமல், மக்கள் படாத பாடுபட்டு வருகிறோம். மாநகரம், அதைச் சுற்றி உள்ள சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன. மிக அவசியமான  சிங்காநல்லூர் பாலம் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள இரண்டு மேம்பாலங்களும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. தினம்தோறும் அப்பகுதியைக் கடந்து போகும் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதனை மையப்படுத்தி முன்பிருந்த அரசாங்கத்தை மக்கள் திட்டித் தீர்த்தார்கள். இப்பொழுது அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு கட்சிக்காரர்களான நாங்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கின்றோம்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்தி வந்ததும் உடனே நடவடிக்கை எடுத்தோம். ஆனால் நம் உள்ளூர் தொழிற்சாலைகள் மின் கட்டண உயர்வு இருப்பதாக இருப்பதாக போராடுகிறார்கள். இதற்கு இன்றுவரை ஒரு சரியான தீர்வு இல்லை. வீட்டு மின் கட்டணம், மாத கட்டணமாக மாறும் என்று சாதாரண மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கி ஆண்டு இரண்டாகிறது. அதோ இதோ, ஸ்மார்ட் மீட்டர் என்று போய்க்கொண்டிருக்கிறதே தவிர, நடைமுறையில் ஒன்றையும் காணவில்லை.

மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதைப்போல சட்டம் – ஒழுங்கு நிலை. ஒருபுறம் கஞ்சா வேட்டை, போதை மாத்திரை கும்பல் கைது என்று வருகிறது. முன்பு இதுபோன்ற குற்றங்கள் அவ்வளவாக இல்லை என்று சொல்வதா அல்லது இது தற்போது அதிகரித்திருக்கிறது என்று சொல்கிறார்களே அது சரியா என்று தெரியவில்லை. வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி என்று பல இடங்களில் செய்தி வருவதற்கும் நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று கவனிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?

கொள்கை ரீதியாக நாம் திராவிட மாடல்தான். இந்திய அளவில் பெயர் பெற்றுள்ள நீங்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறீர்கள். பாராட்டுகள்! ஆனால் அதேபோல உள்ளூரில் மக்கள் நலப்பணியும் சிறப்பாக அமைந்தால்தான் நமது ஆட்சியும் தொடரும்.. அரசியலும் தொடரும். டாஸ்மாக் வருமானத்தில்தான் தமிழ்நாடு நடக்கிறது, பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கிண்டல் அடிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மக்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது.

அடிப்படை திமுக தொண்டனுக்கு ஒரு பெயர் உண்டு. கைக்காசு போட்டு டீ குடித்துக்கொண்டு, சுவரில் உதயசூரியன் வரைபவர்கள் நாங்கள். இன்று காலம் மாறி இருக்கலாம். இருந்தாலும்  திமுகவும், அதன் தலைவர்களும் மக்கள் நலப் பணியில் இருந்து மாறவில்லை என்றுதான் நினைக்கின்றோம். திரும்பிய பக்கமெல்லாம் சென்னையில் பாலங்கள் உள்ளன. மெட்ரோ ரயில் ஓடுகிறது. அதேபோல கோவையிலும், மற்ற நகரங்களிலும் வர வேண்டும். வந்தால் நாங்களும் மக்களிடம் சென்று பேச முடியும்.

அப்போதுதான் மீண்டும் ‘ஸ்டாலின்தான் வாராரு,  விடியல்தான் தந்தாரு’ என்று சொல்ல முடியும்.

இப்போது இருக்கும் தலைவர்களில் திராவிட இயக்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான். அந்தக் காலத் தலைவர்களுடன் நேரில் பழகிய தலைவர் நீங்கள்தான். எனவே இதை எல்லாம் செய்ய வேண்டியது உங்கள் கடமை.  நான் 40 ஆண்டு காலத் தொண்டன் என்ற வகையில் மனதில் பட்டதை சொல்லிவிட்டேன், வணக்கம்!