நோயற்ற வாழ்விற்கு சிறுதானியம் தேவை!

இன்றைய சமூகம் நல்ல உடல்நலத்திற்கு கவனம் செலுத்துவதை மறந்து உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடைய துரித உணவுகளை (பாஸ்ட் ஃபுட்) அதிக அளவில் விரும்பி உட்கொண்டு வருகின்றனர். இவ்வகையில் உணவே மருந்து என்பதற்கு நல்ல உதாரணமாக   அமைத்துள்ள சிறுதானிய உணவுகளின் பயன்களை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சிறுதானியங்கள் என்பது கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு  போன்ற சிறுவிதைகளையுடைய தானியங்களாகும்.

மக்கள் அனைத்து உணவுகளையும் ருசியாகவே உண்டு அதற்கு அடிமையாகியுள்ள நிலையில், சிறு தானியங்களின் பெயரைக்கூட கால மாற்றத்தால் மறந்துவிடுகின்றனர். வறட்சி நேரத்திலும் வளரக்கூடிய சிறுதானியத்தில் அதிக புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

பயன்கள்:

சிறுதானிய உணவு சர்க்கரை, எண்ணெய், காரம், கொழுப்பு, உப்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதால் வரும் நோய்களை  சரிசெய்ய உதவுகின்றன. நார்சத்து மிகுந்த சிறுதானியங்கள்  பசியை நீண்டநேரம் தாங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும், சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்தி, எலும்புகள் வலுவடைய உதவுகின்ற சிறந்த உணவாக கருதப்படுகிறது.

இரவு நேரத்தில் சிறுதானியங்கள் சேர்த்து கொள்வதன் மூலம் தூக்கமின்மையால் அவதி படுபவர்களுக்கு பலன் அளிக்கும். மெக்னீசியம் அளவும் அதிகம் உள்ளதால் பெண்கள் இதை அடிக்கடி சேர்க்கும் போது மாதவிடாய் உபாதை குறையக்கூடும்.

பொதுவாக இறைச்சி உணவுகளை காட்டிலும் தாவர உணவான  சிறுதானியங்களில் அதிக அளவு புரதம் எளிதாக கிடைக்கிறது.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் உணவுமுறையை (டயட்)  மேற்கொண்டு , சிலர் மூன்று வேளையும் கோதுமையே உண்பார்கள்.  அது தேவையற்றது சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகுவதால் உடல்நலத்தை சீராக  பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி தேவை:

எதிர்ப்புச் சக்தி நிறைந்த சிறுதானிய உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது  உணவு செரிமானமாக உரிய உடற்பயிற்சி தேவைப்படுகிறது. குறிப்பாக தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் சிறுதானிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியமான உணவுகளைத் தயாரித்து உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாத்து நோயற்ற வாழ்வை வாழ்வோம்.