கோவையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள் ஆய்வு

கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெறும் நிலையில், வருகிற ஜூலை 15-ம் தேதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரெயில் சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்ளில் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல கோவை மதுரை உள்பட 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும், கோவை, மதுரையில் முறையே ரூ.9,000 கோடி, ரூ.8,500 கோடி என ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவற்காக ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இந்த ஆய்வு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவன உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பாக ஆலோசித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எங்கெல்லாம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைகின்றன. பஸ் ரெயில் நிலையங்கள் இணைப்பு பகுதிகள், பயணிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பது குறித்து கடந்த இரண்டு நாள்களாக கோவையில் ஆய்வு நடைபெறுகிறது.

விரிவான திட்ட அறிக்கையை வருகிற ஜூலை 15-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைவிடங்கள் உள்பட பல்வேறு விவரங்கள் இதில் இடம்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.