பராமரிப்பு இல்லாத திருச்சி ரோடு – வாகன ஓட்டிகள் சிரமம்

கோவை, சூலுார் திருச்சி ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையான திருச்சி ரோடு, கரூரில் இருந்து சூலுார் வழியாக கோவை நோக்கி செல்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், காங்கயம் பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, பாப்பம்பட்டி பிரிவு முதல் சிந்தாமணிப்புதுார் வரை ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

இந்நிலையில், இந்த ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

திருச்சி ரோடு விரிவாக்கம் செய்த பின், முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதில்லை. இதனால், ரோட்டில், பல இடங்களில் சிறிய குழிகள் ஏற்பட்டு அவை பள்ளங்களாக மாறி உள்ளன.

காடாம்பாடி தனியார் பெட்ரோல் பங்க் அருகில், ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் பலவும் அந்த இடத்தில் விபத்துக்குள்ளாகின. தற்காலிகமாக அங்கு பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் அந்த இடத்தில் விலகி, மண் ரோட்டில் வரவேண்டிய நிலை உள்ளது.

அந்த இடத்தில் மண் ரோடும் பள்ளமாகி மழை நீர் தேங்கி உள்ளது. சூலுார் நகர பகுதிகளிலும் பல இடங்களில் ரோடு சேதமடைந்துள்ள நிலையில்  தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,என்றனர்.