கோவையில் கால்நடை சிறப்பு முகாம்

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 4 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் இச்சிறப்பு முகாமானது வருகிற 27-ந் தேதி அன்று காரமடை ஊராட்சி ஒன்றியம் சின்னகுமாரபாளையம் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, தடுப்பூசிகள். குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், சுண்டு வாத அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம், கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளின் சாணம், ரத்தம், சளி, பால் மற்றும் சிறுநீர் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்பட உள்ளது. மேலும், இந்த முகாமில் கண்காட்சி அரங்கு மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு அமைக்கப்பட உள்ளது. சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கும், முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தீவன பயிர்கள் வளர்ப்பு, கால்நடைகளில் நோய் தடுப்பு முறைகள், தொழில் நுட்பம் சார்ந்த கால்நடை வளர்ப்பு முறைகள், பாலின பிரிப்பு முறையில் கருவூட்டல், தூய்மையான பால் உற்பத்தி, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போன்ற தகவல்கள் அளிக்கப்படும். எனவே, சின்னகுமாரபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்கள் இந்த அரிய சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.