ஆசிய வாள் வீச்சு போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை!

சீனாவில் உள்ள வுக்ஸீ நகரில் ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில், தமிழகத்தின்  சென்னையைச் சேர்ந்த பவானி தேவி (29), சாப்ரே பிரிவில் பங்கேற்றார். பவானி தேவி, உஸ்பேகிஸ்தானின் ஜெய்னா தயிபெகோவாவுடன் மோதியுள்ளார். கடும் போராட்டத்திற்குப் பின் 14-15 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார், இருப்பினும் அரையிறுதிக்கு முன்னேறியதால் பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்று வரலாறற்றுச் சாதனை படைத்துள்ளார்.

எனவே, ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீரங்கனை என்ற  சிறப்பைப் பெற்றார். இதற்க்கு முன்னதாக நடைபெற்ற கால் இறுதி போட்டியில் உலக சாம்பியனான ஜப்பானை சேர்ந்த மிசாகி எமிராவை 15-10 என்ற கணக்கில் வென்று அனைவரின் பார்வையை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய வாள் வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜிவ் மேத்தா வரலாற்றுச் சாதனை படைத்த பவானி தேவிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ” இது  இந்திய வாள் வீச்சுக்கு மிக பெருமைக்குரிய நாளாகும்”. இதுவரை யாராலும்  சாதிக்க முடியாததை  பவானி தேவி  சாதித்துள்ளார். அவருக்கு அனைத்து வாள்வீச்சு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்  வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவி, டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் 32-வது சுற்றில் வெளியேறினார்.