உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்!

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புரூக் பீல்ட்ஸ் மால் நிர்வாகம் இணைந்து புரூக் பீல்ட்ஸ் மாலில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இரண்டு நாட்கள் நடைபெறும் (ஜீன் 17, 18) “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” கண்காட்சியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சனிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பற்றிய விழப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய விழப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவர்களும் இதில் பங்கேற்கும் விதமாக இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, கழிவு பிரித்தல், கழிவுகளை அப்புறுப்படுத்துதல் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பரமபதம் (ஏணியும், பாம்பும்) போன்ற பல்வேறு விளையாட்டுகள், வினாடி வினா போட்டிகள், வார்த்தைகளை சீரமைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக 14 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

என்.ஜி.ஓ (அரசு சாரா தொண்டு நிறுவனம்), ஜி.ஓ. (அரசு அமைப்பு), ஸ்மார்ட் சிட்டி மிஷன், சிறுதுளி, டான்சிம், டபிள்யு.டபிள்யு.எப், ராக், ஈஷா, க்யூப் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது படைப்புகளை அரங்குகளில் காட்சிப்படுத்த உள்ளன. தூய்மையான, பசுமையான கோவையை உருவாக்கிட பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி, இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும்  என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (ஸ்மார்ட் சிட்டி) பாஸ்கரன், புரூக் பீல்ட்ஸ் மால் முதன்மை செயல் அலுவலர் அஸ்வின், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.