அறுவை சிகிச்சையின்றி இரத்த குழாய் விரிவாக்கம் அரசு மருத்துவர்கள் சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி ரத்த குழாய் விரிவாக்கம் செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 21. இவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், இரு கைகளில் ரத்த அழுத்தம் அதிகமாகவும், கால்களில் ரத்த அழுத்தம் குறைவாகவும் காணப்பட்டது.’எக்கோ’ பரிசோதனை மேற்கொண்டதில் ரத்த குழாயில் சுருக்கம் இருந்தது. இந்த ரத்தக்குழாய், இருதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்து செல்லும் மகாதமணி ஆகும்.

இதனால் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, இருதயம் தடித்தல், இருதய செயலிழப்பு, மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.மகாதமணியின் சுருக்கத்தை சரி செய்ய, அறுவைசிகிச்சையின்றி தொடை வழியாக பலூன் செலுத்தி குறுகலான பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இது, கோவை அரசு மருத்துவமனை இருதயத்துறை சார்பில், முதல் முறையாக அறுவை சிகிச்சையின்றி ரத்த குழாய் விரிவாக்க செய்யப்பட்ட சிகிச்சை. தற்போது, நோயாளி உடல் நலத்துடன் உள்ளார்.

சென்னை தனியார் மருத்துவமனை குழந்தை நல இதயவியல் நிபுணர் முத்துக்குமரன் தலைமையில், கோவை அரசு மருத்துவமனையின்  இருதவியல் துறை தலைவர் நம்பிராஜன், துணை பேராசிரியர்கள் சக்கரவர்த்தி, செந்தில்குமார், மணிகண்டன், சதிஷ் குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் சண்முகவேல் உள்ளிட்டோர் சிகிச்சையில் பங்கு வகித்தனர்.