கோவைப்புதூர் தினத்தை முன்னிட்டு நேரு கல்வி குழுமம் சார்பில் சைக்கிள் பந்தயம்

கோவைப்புதூர் தினத்தை முன்னிட்டு கோவைப்புதூர் குடியிருப்போர் நலச்சங்கம், கோவை பெடலர் சைக்கிளிங் கிளப் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் சார்பில் சைக்கிள் பந்தயம் சனிக்கிழமை கோவைப்புதூர் எ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சைக்கிள் பந்தயத்தை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்த போட்டியானது கோவைப்புதூர் எ மைதானத்தில் துவங்கி ஆஸ்ரம் அமட்ரிக்குலேசன் பள்ளி, பேரூர் குளம், பட்டீஸ்வரர் கோவில், ஆறுமுக கவுண்டனூர், சாந்தி ஆஸ்ரமம், சிபிஎம் கல்லூரி, சிஎஸ் அகாடமி, போலீஸ் கேம்ப் ரோடு வழியாக மீண்டும் கோவைப்புதூர் எ கிரவுண்டை வந்தடைந்தது.

இதில் குழந்தைகளுக்கு 10 கிலோ மீட்டரும் பெரியவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு டி-சார்ட், சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து, கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் கூறியதாவது, தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் கோவைப்புதூர். இது கேரளா மாநிலம் பாலக்காடு செல்லும் வழியில் கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்நகரம் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக இருந்த போது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இது திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கச்சிதமான நகரமாகும்.

இங்கு ஆரம்பகாலத்தில் அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் வீடு மனைகள் வழங்கப்பட்டன. இங்கு ஒரு நாகரிக நகருக்கு தேவையான எல்லா வசதிகளும் முன்னரே திட்டமிடப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு அஞ்சல் நிலையம், வணிக வளாகம், பேருந்து நிறுத்தங்கள், விளையாட்டு திடல்கள், நீர் நிலைத் தொட்டிகள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 19 ஆம் தேதி கோவைப்புதூர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை முன்னிட்டு நேரு கல்வி குழுமம் சார்பில் இங்குள்ள பொது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கவும் சனிக்கிழமை சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. எனக் கூறினார்.